
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருப்பதால், நாளுக்கு அவருக்கு அதிகரிக்கும் ஆதரவைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு அணி மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் இரண்டாக பிளவுபட்ட அதிமுக தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதுக்குப்பின், ஓபிஎஸ், இபிஎஸ் இனைந்து, தினகரனை கழட்டி விட்டனர். அவர் ஏற்கனவே கொடுத்த தொப்பி சின்னத்தையும் முடக்கி குக்கரை கொடுத்தனர். இரு அணிகளும் யாருக்கு மக்கள் மத்தியில் பலம் இருக்கிறது என்பதற்காக இடைதேர்தலில் களமிறங்கினர். இபிஎஸ் அணியினர் கட்சியின் இரட்டை இலை சின்னம் கிடைத்த தைரியத்தில் தெம்பாக களமிறங்கினர். ஆனால், தினகரன் சுயேட்சையாக களத்தில் குதித்தார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றிலும் தினகரனே முன்னிலை வகித்தார். இறுதியில் தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தினகரனின் இந்த வெற்றியால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தேர்தல் முடிவு வெளியான அன்றே ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.எல் .ஏ க்கள் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணி ஆதரவாளர்கள் சிலர் தினகரன் அணியில் சேர தூது அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய அதிமுக புள்ளிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொத்தாக தினகரன் கூடாரத்தில் ஐக்கியமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான முதற்கட்ட வேலைகளில் சசிகலா புஷ்பா இறங்கியுள்ளதாக தெரிகிறது.