ஐ.டி. ரெய்டால் வேலூரில் இடைத்தேர்தல் ரத்தாகுமா? அச்சத்தில் அலறும் எதிர்க்கட்சிகள்!

By Asianet TamilFirst Published Apr 4, 2019, 10:43 AM IST
Highlights

தமிழகத்தில் ஏற்கனவே 22 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வேலூரில் நடைபெற உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ரத்தாகுமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளன. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளில் குறித்த நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், தேர்தல் 7 கட்டங்களுக்குள் நடத்தி முடிக்கப்படுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு நடத்தப்படுமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
தற்போதைய நிலையில் 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் அதிமுக வென்றால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஒரு வேளை 18 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தால் ஆட்சி கவிழும் நிலையும் ஏற்படலாம். எனவே, இடைத்தேர்தலை தமிழக கட்சிகள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில் வேலூரில் கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டுள்ளதால், வேலூரில் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வேலூரில் பிடிபட்ட பணம் குறித்து வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை மனதில் வைத்துதான், தேர்தலை ரத்து செய்தால் திமுக பார்த்துகொண்டு சும்மா இருக்காது என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.


வேலூர் தொகுதி என்பது நாடாளுமன்றத் தொகுதியோடு முடியவில்லை. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் என மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. சோளிங்கர் தொகுதி அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தாலும் வேலூர் மாவட்டத்துக்குள் வருகிறது. எனவே, எதையாவது காரணம் காட்டி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ரத்து செய்யபடுமோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகளிடம் உள்ளது.


தேர்தல் ரத்தானால், அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால், இதைப்பற்றி அக்கட்சி அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால், திமுக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், இடைத்தேர்தலை ரத்து செய்ய தொடர்ந்து சதி திட்டம் தீட்டப்பட்டுவருவதாக இக்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. 

click me!