
தமிழ் நாட்டில் உள்ள பல எம்.எல்.ஏ க்கள் முதல்வர் கனவில் மிதக்கிறார்கள் என்று கிண்டலடித்துள்ளார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து, முதல்வர் உள்பட மேலும் சில அமைச்சர்கள் வீட்டில் ரைடு நடத்தப்போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்து சமரசம் பேசினார் தம்பிதுரை.
அப்போது, ஆளும் அரசில் உள்ள அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தினால், அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும் என்று கூறியுள்ளார்.
மேலும், முதல்வர் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்த போவதாக கூறப்படுவதால், அதையும் நிறுத்துமாறு கோரியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசிய தம்பிதுரை, முதல்வர் மற்றும் மற்ற அமைச்சர் வீடுகளை ரைடு நடத்தாமல் இருக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
அதையும் மீறி, முதல்வர் உள்பட அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தினால், முதல்வர் பதவி விலக நேரும். அவ்வாறு, அவர் முதல்வர் பதவி விலகினால், தாம் முதல்வராக உதவி செய்ய வேண்டும் என்றும், உங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தம்பிதுரையை போல, ஏற்கனவே சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள், தங்களது நட்பு வளையத்தின் மூலம், வெங்கையா நாயுடுவை சந்தித்து, முதல்வர் பதவியின் மீது தங்களுக்கு உள்ள ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், தம்பிதுரையும் அதே ஆசையை வெளிப்படுத்தியதால், வெறுத்துப்போன வெங்கையா நாயுடு, ஜெயலலிதா இறந்தாலும் இறந்தார், தமிழ்நாட்டில் பல எம்.எல்.ஏ க்கள் முதல்வர் கனவில் மிதக்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர்களிடம் கிண்டலடித்து வருகிறாராம்.