
ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே, மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் பரபரப்பாக பேசியிருப்பது அதிமுகவிற்குள் மீண்டும் களேபரத்தை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக தொடர்ந்து கட்சித் தலைமைக்கும் அரசுக்கும் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.கனகராஜ், அங்குள்ள கல்குவாரியை மூட வேண்டும் என அரசை பகிரங்கமாகவே மிரட்டினார். அதற்கு பணிந்து கல்குவாரி உடனடியாக மூடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் உண்ணாவிரதம் இருந்து அரசியல் ஸ்டண்ட் அடித்தார். ஒரு எம்.எல்.ஏ. அரசை மிரட்டுவதா! என அவரை அழைத்து கடுகடுக்காமல் குணசேகரனின் கோரிக்கைகளுக்கு கிரீன் சிக்னல் காட்டி அடிபணிந்தது அரசு.
கனகராஜ், குணசேகரன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது நபராக கிளம்பியுள்ளார் சசிகலா குடும்பத்து ஆதரவு எம்.எல்.ஏ.வான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம். கோயம்புத்தூர் ராவணனின் தீவிர ஆதரவாளரான இவர், அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் எதிரி ஆவார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கோலோச்சி வந்த தோப்புவின் சாமராஜ்யம், செங்கோட்டையனின் சமீபகால அதிரடி வளர்ச்சியால் மகுடத்தை இழந்தது. அதனால் செங்கோட்டையன் மீதான தோப்புவின் வெறுப்பு தொடர்ந்து அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன்னைக் கண்டு அந்நாட்டு ராணுவத் தளபதிகள் எப்படி பம்முவார்களே, அதைவிட பன்மடங்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது அவரை தலைநிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். முதல் அமைச்சர் மீது அந்த அளவுக்கு பயபக்தியாக இருப்பார்கள்.
ஆனால் தற்போதைய கதையோ தலைகீழ். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப் போல் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளாளுக்கு அட்வைஸையும் எச்சரிக்கையையும் சகட்டு மேனிக்கு அளித்து வருகின்றனர்.
தனது சொந்த தொகுதியான பெருந்துறையில் நிருபர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாச்சலம், தான் சார்ந்திருக்கும் அரசையே குறை கூறும் வகையில்,பல அணுகுண்டு கருத்துக்களை தெரிவித்து தடதடத்திருக்கிறார்.
"மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த அரசு பின்தங்கி விட்டது.குடிநீர் இல்லாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாததால், பெருந்துறை மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது" என தனது பக்கத்து மாவட்ட அமைச்சரான எஸ்.பி.வேலுமணியையும் முதல் அமைச்சர் எடப்பாடியையும் மறைமுகமாக சாடி திரிகொளுத்தி போட்டிருக்கிறார்.
எல்லாவற்றையும் விட ஹைலைட்டாக ஆட்சியையும் கட்சியையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மனதில் குழப்பத்தில் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு விடக்கூடாது என்று கூறிய தோப்பு வெங்கடாச்சலம், ஜெயலலிதாவைப் போல செயல்பட்டால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாச்சலம் அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருவதால், ஓ.பி.எஸ். அணிக்கு அவர் மாறிவிடுவாரோ என்ற அச்சம் சசிகலா தரப்பினரிடையே தாங்க முடியா தகிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவக் கட்டுப்பாடு என மார்தட்டிக் கொண்டிருந்த அதிமுகவில், தற்போது ஒரு சாதாரண தொண்டனைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் யதார்த்தம்