
பன்னீர் செல்வத்திற்கு நேர்ந்தது போன்று உங்களுக்கும் நிகழாமல் இருக்கவேண்டும் என்றால் தினகரனை தள்ளி வைக்க வேண்டும், இல்லையென்றால் கட்சியும், ஆட்சியும் நம் கையை விட்டுப் போவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மூத்த அமைச்சர்கள் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர். தொடர்ந்து சசிகலாவின் பதவி ஆசையால் ஓ.பி.எஸ்ஸை பதவி விலக சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் பதவி விலகிய ஒ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பல இடையூறுகளையும் நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறார்.
அதைதொடர்ந்து தற்போது சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதே நெருக்கடி நிலவி வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பதவி விலக சொல்லி, தினகரன் தரப்பில் இருந்து சிலர் தூது வந்து செல்கின்றனர். இதனால் முதலமைச்சர் எடப்பாடி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக கட்சியின் மூத்த அமைச்சர்களான ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வீரமணி, வேலுமணி ஆகியோரை அழைத்து எடப்பாடி ஆலோசனை நடத்திக் வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்பட்டதோ, அதே பிரச்சனை இப்போது எனக்கும் வந்திருக்கிறது.
ஆனால் அவர்கள் நிர்பந்தப்படுத்துவதற்காக நான் ராஜினாமா செய்யப் போவதில்லை. முடிந்த வரையில், எவ்வளவு அதிகமாக உழைக்க முடியுமோ அந்தளவுக்கு ஒரு முதலமைச்சராக இருந்து செயல்படுவேன்.
இது குறித்து, மூத்த அமைச்சர்களான நீங்கள்தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்று அமைச்சர்களிடம் எடப்பாடி கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய மூத்த அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினரால்தான் அதிமுக கட்சி இரு பிளவாக பிரிந்து நிற்கிறது. இனியாவது பன்னீர்செல்வமும், நாமும் ஒன்றாக இணைந்தாக வேண்டும்.
அப்படி இணைவதற்கு ஒரே தடை சசிகலா குடும்பம்தான். அவர்களைத்தான் நாம் தள்ளி வைக்க வேண்டும்.
நாமும், ஓ.பி.எஸ்.சும் இணைந்து, ஆட்சியையும், கட்சியையும் பார்த்துக் கொள்ளலாம்.
இல்லையென்றால், கட்சியும், ஆட்சியும் நம் கையை விட்டுப் போவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது என கூறியுள்ளனர்.