
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வந்த தமிழகம் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து போராட்ட பூமியாகவே மாறிவிட்டது. ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனா கடற்கரையில் தொடங்கிய போராட்டம், நெடுவாசல் வரை நீண்டு தற்போது டெல்லியிலும் விவசாயிகள் வழியாக ஓங்கி ஒலித்து வருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மக்களின் போராட்டங்களுக்கு கிஞ்சிற்றும் மதிப்பளிக்காமல் திட்டத்தை செயல்படுத்தியே தீருவது என தான் கொண்ட கொள்கையில் இம்மி அளவும் விலக மாட்டேன் என்று மத்தாப்பு காட்டுகிறது மத்திய அரசு.
மக்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டிய தமிழக அரசோ, பல நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மெளனியாகி விட்டதாகவே தெரிகிறது.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா எள்ளிநகையாடிய போது, பெயரளவுக்கு கூட அரசிடம் இருந்து கண்டனம் தெரிவிக்கப்படவில்லை.
இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தவந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின்,மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளிக்கக் கூடிய வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடத்தியுள்ளார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இடதுசாரி கட்சித் தலைவர்களான முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி ஜவஹாருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் பிரச்சனை குறித்து அனைத்து தலைவர்களின் கருத்தை ஒருமித்து அதனை போராட்ட களத்தில் செயல்படுத்த செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.