
பாஜக தீண்டத்தகாத கட்சியா ? என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !!!
இந்தியாவை 10 ஆண்டுகள் ஆண்ட பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும், அக்கட்சியை மதவாத கட்சி என்று கூறி ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , பால் கலப்படம் தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு பிறகு,தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்வதை நிறுத்திவிட்டன என் அதிரடியாக தெரிவித்தார்.
மேலும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் அறிவுறுத்தும் வழியில் இந்த விவகாரத்தில் அரசு செயல்படும் என்றும் கூறினார்.
தினகரனை கட்சியிலிருந்து யாரும் ஒதுக்கிவைக்கவில்லை என்றும் அவரை எம்எல்ஏக்கள் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர்களுக்கு நேரம் இல்லாத காரணத்தால் தினகரனை சந்திக்கவில்லை என்றும் நான் எனது பணிகளை முடித்து விட்டு நிச்சயம் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மாட்டிறைச்சி விவகாரத்தை பொறுத்தவரை பெரும்பான்மை மக்களின் எண்ணம் எதுவோ அதை அரசு செயல்படுத்தும் என்று தெரிவித்த அவர், பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல, என்றும் அக்கட்சியை , மதவாத கட்சி என்று கூறி ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாமியரான அப்துல் கலாமை குடியரசு தலைவர் ஆக்கியது பாஜக தான் என்றும் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.