
குடியரசு தலைவர் தேர்தலுக்கு, அதிமுகவின் எம்.பி, எம்.எல்.ஏ வாக்குகள் முக்கியம் என்பதால், தமிழக அரசின் மீதான தாக்குதல்களை கொஞ்சம் நிறுத்தி வைத்திருந்தது மத்திய அரசு.
ஆனால், போகிற போக்கை பார்த்தால், அதிமுக வாக்குகளே அவசியம் இல்லை என்ற நிலை வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரௌபதி மர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டால், போட்டியே இல்லாமல் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார் மோடி.
தற்போதைய நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக மற்றும் ஆதரவு கட்சிகளின் வாக்கு 48 .64 சதவிகிதம் உள்ளது. அதாவது 5 லட்சத்து, 32 ஆயிரத்து 37 வாக்குகள் உள்ளன. பாஜக வேட்பாளர் வெற்றி பெற மேலும் 14 ஆயிரத்து 405 வாக்குகள் மட்டுமே தேவை.
காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் வாக்குகள் 35 .7 சதவிகிதம் உள்ளன. இது தவிர அதிமுக, பிஜு ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஹரியானாவில் உள்ள ஐ.என்.எல்.டி ஆகிய ஆறு கட்சிகளின் வாக்குகள் 13 .06 சதவிகிதம் உள்ளன.
இந்த ஆறு கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, காங்கிரஸ் கட்சியால், பாஜகவுக்கு கடும் போட்டி கொடுக்க முடியும். மேலும் ஓடிஸாவை சேர்ந்த திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டால், பிஜு ஜனதாதளம் வேறு வழியின்றி அவருக்கே வாக்களிக்க நேரும்.
அதேபோல், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. எனினும், பழங்குடி இனத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை நிறுத்தி, போட்டி இல்லாமல் வெற்றி பெற வேண்டும் என்பதே மோடியின் கணக்காக உள்ளது.
ஒரு வேளை, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும், மற்ற கட்சிகளின் வாக்குகளின் வாக்குகளை அக்கட்சியால் பெற முடியாது என்பதால், பாஜக வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே, அதிமுக வாக்குகளை, தற்போது பிரதமர் மோடி பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால், சசிகலா, தினகரன் உள்ளிட்ட யாரும், குடியரசு தலைவர் தேர்தலில், அதிமுக வாக்குகளை மையப்படுத்தி, எந்த நிர்பந்தமும் கொடுக்க முடியாத ஒரு நிலையை உருவாக்கி விட்டார் மோடி.
அதிமுகவில் ஜெயலலிதா போன்ற ஒரு ஆளுமையுள்ள தலைவர் இல்லாததால், மீண்டும் அதிமுக மக்கள் மத்தியில் வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று அவர் நினைக்கிறார். மறுபக்கம், கனிமொழி மூலமாக திமுகவுடனும், பாஜக தலைவர்கள் ஒரு நெருக்கத்தை உருவாக்கி வைத்துள்ளனர். தவிர, ரஜினி என்ற மற்றொரு குதிரையும் பந்தயத்திற்கு தயாராக்கப்பட்டு வருகிறது.
எனவே, குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பிறகு, வரும் டிசம்பர் மாதத்திற்குள், அதாவது சனிப்பெயர்ச்சியை ஒட்டி, தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் மத்தியில் இப்போதே பதற்றம் தொற்றி கொண்டுள்ளதாக கோட்டையில் பேசப்படுகிறது.