
ஸ்டாலின் மொபைலில் இருந்து அழைப்பு வந்தால் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரது மொபைல்கள் ‘தளபதி தளபதி எங்கள் தளபதி” என்று விஜய் பட பாடலை பாடும்.
அதேபோல் டி.டி.வி.தினகரனின் மொபைலில் இருந்து தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோருக்கு அழைப்பு வந்தால் ‘தலைவா! தலைவா! சரிதம் எழுது தலைவா’. _ என்று அதே பாடலின் இன்னொரு பரிமாணத்தை பாடுகிறது.
யதேச்சையாக யாருமறியாமல் அமைந்த இந்த போட்டி கிட்டத்தட்ட உண்மையாகவே மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் இரு கழகங்களையும் ஸ்கேன் நெருக்கமாக ஸ்கேன் செய்து கொண்டிருக்கும் அரசியல் பார்வையாளர்கள்.
திமுக வின் தலைவனாவதற்கு தளபதி முயன்று கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க.வில் புதியதாக ஒரு தலைவனை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களென்பது எளிதில் கடந்து சென்றுவிடக்கூடிய விஷயமல்ல. திகாருக்கு சென்று வந்த பிறகும் தினகரனுக்கு அரசியலரங்கில் அஸ்திவாரம் இறுகுகிறதென்றால் தமிழக அரசியலில் அவர் தவிர்க்க முடியாதவராகிறார் என்பதே உள்ளர்த்தம்.
அதேபோல் கருணாநிதியின் வைரவிழாவுக்கு தேசிய கவனத்தை ஈர்த்துக் கொடுத்ததன் மூலமாக மத்திய அரசியலிலும் மதிப்பிற்குரிய மனிதராகி இருக்கிறார் ஸ்டாலின்.
இந்த சூழலில் ’ஸ்டாலின் vs தினகரன்’ எனும் புதிய கான்செப்ட் தமிழக அரசியலில் தலைதூக்கி இருப்பதை மளமளவென ஆமோதிக்க வேண்டியிருக்கிறது.
ஆட்டம் துவங்கும் முன் களத்தில் இருக்கும் வீரர்களின் பவர் ப்ரொஃபைல் அலசப்படுவது போல் ஸ்டாலின் மற்றும் தினகரனின் பலம் மற்றும் பலவீனங்களை பிரித்து மேய துவங்கிவிட்டனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஸ்டாலின் மிசாவில் கைதாகி இரத்தம் சிந்தினார், அரும்பு மீசைக்காரனாக இருந்தபோதே முரசொலியில் அரசியல் கட்டுரை எழுதினார் என்று ஸ்டாலினுக்கு சாதகமாகவும்! பெரியகுளம் தொகுதியின் எம்.பி.யாக கலக்கியவர், பன்னீர் செல்வத்தின் அரசியல் ஆசான் என்று தினகரனுக்கு சாதகமாக பழைய வரலாறுகளை தூசி தட்டினால் தும்மல் மட்டுமே வரும் என்று போட்டுத்தாக்கும் அவர்கள் தற்போதைய காலகட்டடத்தில் இருவரின் திறன்களையும் வைத்து எடைபோடுகிறார்கள்.
அதில் ஹைலைட் பாயிண்டுகள் இப்படியாக வரிசைகட்டுகின்றன...
*என்னதான் செயல்தலைவர் என்றாலும் கருணாநிதி செயலற்று இருக்கும் நிலையில் ஸ்டாலினே தலைவராக செயல்படுகிறார். தி.மு.க.வின் முழு அதிகாரமும் இவரது கையில்தான் இருக்கின்றன. கட்சி வட்டத்திற்கு வெளியே நிற்கும் அழகிரியால் புரட்சி பண்ணவும் முடியவில்லை, உள் வட்டத்திற்குள் இருந்தாலும் கூட மறுக்கப்படும் முன்னேற்றத்தை எதிர்த்து கனிமொழியால் கலகம் செய்யவும் முடியவில்லை. ஆக ஒட்டுமொத்தமாக இயக்கம் தன் கைகளில் இருந்தாலும் கூட ஸ்டாலின் இன்னமும் அதிரடி அரசியல் வெள்ளத்தில் கால்வைக்க தயங்குவது அதிர்ச்சி தருகிறது.
அதேவேளையில் தமிழக காங்கிரஸுக்கே சவால் விடும் வகையில் பிளந்து கிடக்கிறது அ.தி.மு.க. ஒட்டுமொத்த கட்சிக்கு துணை பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொண்டாலும் கூட உண்மையில் ஒரு கோஷ்டியின் தலைவனாக மட்டுமே இருக்கிறார் தினகரன். ஆனால் அதே வேளையில் சைலன்ஸர் பொருத்திக் கொண்ட நியூக்ளியர் பாம் போல இவர் நடத்தும் மெளன யுத்தங்கள் ஒட்டு மொத்த கட்சியையும் தெறிக்க விடுகின்றன. செயல்புயலாகதான் இருக்கிறார் தினகரன்.
*அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மை எனும் விஷயத்தை பொறுத்தவரையில் ஸ்டாலின் கிரேட்தான். ஜெ., போட்ட மேம்பால ஊழல் வழக்கெல்லாம் ஸ்டாலின் தன்னை கைசுத்தமானவன் என நிரூபிக்கதான் உதவியதே தவிர பெயரை கெடுக்கவில்லை. சாதாரண கவுன்சிலர்களே பதவியிலிருக்கும் ஐந்து வருடத்தில் பரம்பரை பணக்காரனாகும் நிலையில் துணை முதல்வராக இருந்த போதும் ஊழல் பஞ்சாயத்தில் சிக்கவில்லை ஸ்டாலின்.
தினகரனை பொறுத்தவரையில் ஃபெரா வழக்கு அவரின் நற் பெயரின் மேல் ஆணியடிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனால் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சமீபத்தில் திகாருக்குள் அவரை தள்ளிய வழக்கு ‘அனுமானத்தின் அடிப்படையில் போடப்பட்டது’ என்று விமர்சிக்கப்பட்டது அவருக்கான பெரிய ப்ளஸ். மத்திய அரசால் பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்று மக்கள் மன்றத்தின் மனதிலேயே நச்சென பதிந்திருக்கிறது. இது தினகரனுக்கு சில படிகள் உயர்வை தந்திருக்கிறது.
*இத்தனை ஆண்டுகளாய் முழுநேர அரசியல்வாதியாக இருந்தாலும் கூட ஸ்டாலினின் ‘தொட்டா சிணுங்கி’ குணம் அவருக்கு ஒரு மைனஸே. மகளிர் சுயவுதவி குழுக்களுக்கு பல நூறு மணி நேரம் நின்றபடியே நிதியுதவி வழங்கி சாதனை படைத்தவர்தான். ஆனாலும் இன்று ஏர்போர்ட்டில் ஆர்வ மிகுதியில் ஒரு தொண்டன் வந்து சாய்ந்துவிட்டால் சுள்ள்ளென பொத்துக் கொண்டு வருகிறது கோபம். இதை தவிர்க்கலாமே தளபதி!
உச்சந்தலையில் சுத்தியலால் அடிப்பது போல் நிருபர்கள் கேள்வி கேட்டாலும் புன்னகையை மட்டுமே பூசி பதில் தரும் தினகரனின் ‘மிஸ்டர் கூல்’ குணம் அவரை எங்கோ கொண்டு போய் வைக்கிறது. அரசியலில் இருந்தே தன்னை அப்புறப்படுத்திட துடிக்கும் அமைச்சர்களையும் கூட ‘சகோதரகளுக்கு என்ன பயமோ’ என்று பாந்தமாக பால் வீசுகிறார். கீப் இட் அப் தலைவா!
*பிரச்னைகளையே படிக்கட்டுக்களாக்கி அரசியலின் கோபுரம் வரை ஏறி நிற்பவர் ஸ்டாலின். ஆனால் இன்னமும் யாருக்கா? எதற்காக இப்படி வெயிட் செய்கிறார் என்று யாருக்குமே புரியவில்லை. அவர் தமிழக அரசியலை புரட்டிப் போட்டிருக்க வேண்டிய கால கட்டம் எப்பவோ வந்து கடந்துவிட்டது. ஆனால் இப்பவும் வாய்ப்புகள் அவரது வீட்டு வாசலில் கூடாரமிட்டு உட்கார்ந்திருக்கதான் செய்கின்றன. கட்சி ஆரம்பித்ததே தி.மு.க.வை விமர்சிக்கத்தான் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் கூட இவர் பக்கம் இறங்கிவந்துவிட்டன. திருமாவும் எப்பவோ தோழமை பொன்னாடையை போர்த்திவிட்டார். ஆனால் இன்னமும் மெளனம் காக்கிறார் மனிதர்.
கஷ்டமான கால கட்டங்களையும் தனக்கு வாகான வாய்ப்பாக மாற்றி முன்னேறும் கலையில் தினகரன் கிங் என்பதை லைவ் ஷோவாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். வானளாவிய அதிகாரத்தை வைத்திருக்கும் டெல்லி லாபி மட்டும் இவரை தடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் தமிழகத்தின் இடைக்கால முதல்வராக தினகரன் மாறியிருந்தாலும் ஆச்சரியமில்லை!
...இப்படியாக நீள்கின்றன இருவரைப் பற்றிய அலசல்களும்.
தல! தளபதி! ரெண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாக வாய்ப்பேயில்லை. அதையும் தாண்டி ரிலீஸானால் யாருக்கு வெற்றி என்பதை படத்தின் தரம்தானே நிர்ணயிக்கும்.