
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தான்தோன்றி தனமாகவும், மிருக பலம் கொண்ட ஹிட்லர் ஆட்சியையும் நடத்தி வருவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தான் இப்தாரில் பங்கேற்பது வழக்கம் எனவும், நான் சிறப்பு விருந்தினர் அல்ல, உங்கள் விருந்தினர் என தெரிவித்தார்.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது சிறுபான்மையினரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும், தற்போது எதிர்கட்சியாக இருந்து உங்கள் கோரிக்கைகளை சட்டமன்றத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிபிட்டார்.
பெரும்பான்மை காரணமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிகாரத்துவத்தோடு செயல்படுவதாகவும், மிருக பலம் கொண்ட ஹிட்லர் ஆட்சி நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
பாஜக அரசு 3 கால ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை எனவும், தான்தோன்றி காரணமாக சர்வாதிகாரம் கொண்டு ஜனநாயகத்தை கொலை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் கருத்துகளை கூட காது கொடுத்து கேட்க பாஜக தயாராக இல்லை எனவும் தன் குறைகளை மறைக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது எனவும் ஸ்டாலின் பேசினார்.
மத்தியை ஆளும் பாஜக அரசும் தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசும் தங்கள் பதவியை தக்க வைத்து கொள்ளவே துடிக்கின்றனர் என கண்டனம் தெரிவித்தார் ஸ்டாலின்.