‘நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்..’ விளம்பர பிரியர் ராகுலை அடித்து துவைக்கும் பாஜகவின் விமர்சனம்!

 
Published : Jun 08, 2017, 08:03 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
‘நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்..’ விளம்பர பிரியர் ராகுலை அடித்து துவைக்கும் பாஜகவின் விமர்சனம்!

சுருக்கம்

BJP Comments Rahul Gandhi stopped from entering Mandsaur arrested

‘நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்..’ என்று வாண்டெட்டாக வந்து வண்டியில் ஏறும் வடிவேலுவின் நகைச்சுவையை, பாஜகவினர் அதிகம் ரசித்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதே பாணியில்தான் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலின் முயற்சிகள் ஒவ்வொன்றையும் மிச்சம் வைக்காமல் கலாய்த்துவிடுகின்றனர். நாட்டையே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கும் மத்தியபிரதேச விவசாயிகளின் போராட்டத்திலும் இதையே தொடர்ந்திருப்பது சோகமான ஒன்றுதான்..! 

மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்ற குரலை டெல்லியில் அழுத்தமாகப் பதிவு செய்தனர் தமிழக விவசாயிகள். அப்போது பல மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதற்கு ஆதரவு தந்தபோதும், பெரிய விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், மிக தாமதமாக அதன் தாக்கத்தைப் பிரதிபலித்திருக்கிறது மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துவரும் விவசாயிகளின் போராட்டக்குரல். இந்த விஷயத்தில், நாடெங்கிலுமுள்ள விவசாயிகளின் மனத்தை ரணமாக்கியிருக்கிறது அங்குள்ள மண்ட்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு. 

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யவும், விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் போராட்டங்களை முன்னெடுத்தனர் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள். சில வாரங்களாகவே பற்றியெரிந்த இந்த விவகாரத்தினால், சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான மாநில அரசு.  இதனை மீறி மண்ட்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முனைந்தபோது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர் போலீசார். இதில் 5 பேர் மாண்டதாக, அம்மாநில உள்துறை அமைச்சரே ஒத்துக்கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக மண்ட்சோர் மாவட்டத்திற்குள் புகுந்து சம்பவ இடத்திற்குச் செல்ல முயற்சித்திருக்கிறார் ராகுல்காந்தி. சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத் போன்ற அவரது சகாக்களும் உடன் சென்றிருக்கின்றனர். இதனைப் பார்த்த போலீஸ், ‘காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி இல்லை’ என்று வழி மறிக்க, அதனை மீறிச்சென்றதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் ராகுல். 

இத்தோடு விஷயம் முடியவில்லை. ’ஜாமீனில் செல்லமாட்டேன்’ என்று அடம்பிடித்த ராகுல், இன்று மாலையே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ராகுலின் இந்த முயற்சியை, ’சம்பவம் நடந்த இடத்தில் போட்டோ எடுப்பதற்கான ஒரு வாய்ப்பு’ என்று கலாய்த்திருக்கின்றனர் பா.ஜ.க.வினர். ’பதட்டமாக இருக்கும் இடத்திற்குச் செல்லும் முன்பாக, அதுபற்றி ராகுல் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, விளம்பர ஆர்வம் மிகுந்தவராக இருக்கிறார்’ என்று கிண்டல் செய்திருக்கிறார் மத்திய அமைச்சரான நரேந்திரசிங் தோமர். 

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், ‘விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸ் வன்முறையைத் தூண்டுகிறது’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு. ’மோடியின் அரசு விவசாயிகளுக்கு எதிரானது‘ என்று சொல்லி தன் மீதான கவனத்தை அதிகப்படுத்திய ராகுல், அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. 

இந்த பிரச்சனை பற்றி, அவர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார் என்பது உறுதியாகியிருக்கிறது. ஆனால், நடந்த விஷயங்களை வைத்து ராகுலை கைப்புள்ளயாக்கும் வேலையை சோஷியல் மீடியாவில் பாஜக முன்னெடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

PREV
click me!

Recommended Stories

எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!
விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு