
போக்குவரத்துத் துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களைக் கொண்டு பேருந்துளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், மக்களின் சிரமத்தை தவிர்க்க தமிழக அரசு போதிய மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழத்தில் 80% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊதிய உயர்வால் ஆண்டுக்கு ரூ.1000 கோடி கூடுதல் செலவாகும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.