
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 830 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,13,502 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்டு 549 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14,043 ஆக உள்ளது. இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 90 ஆயிரத்து 919 ஆக உள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதித்த 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இப்படி நாளுக்கு நாள் கொரோனா தன்னுடைய கோரமுகத்தை காட்டி வரும் அதே நேரத்தில், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே முதற்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகளை கொள்முதல் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை (27.04.2021), 55.51 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.