பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகளைக் கூட சரிவர வழங்காமல், திமுக பொதுக்கூட்டத்துக்கு வரும் கட்சிக்காரர்களை விட தரக்குறைவாக, சின்னஞ்சிறு குழந்தைகளையும், பெற்றோர்களையும் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, மாணவர்களைத் தேர்வு செய்து அனுப்பாமல், கடந்த ஆண்டு தமிழக பள்ளி அளவிலான விளையாட்டு வீரர்களின் வாய்ப்புகளை வஞ்சித்த திமுக அரசு, பெற்றோர்கள் மற்றும் தமிழக பாஜகவின் கடுமையான கண்டனத்துக்குப் பிறகு, இந்த ஆண்டு விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்கிறோம் என்ற பெயரில், மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைக்கழித்திருக்கிறது.
ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் தேசிய அளவிலான அணித் தேர்வு, தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றிருக்கிறது. பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும், தங்கள் விளையாட்டுக்கான தேர்வு நடைபெறும் நகரங்களுக்கு. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், வீரர்கள் தேர்வு நடைபெறும் இடங்களில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தராமல், புறக்கணித்திருக்கிறது தமிழக அரசு. உதாரணமாக, தமிழக அளவிலான டேக்வாண்டோ அணிக்கான தேர்வு, காஞ்சிபுரத்தில் நடைபெற்றிருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், சரியான தங்கும் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாமல், மழை நீர் வடிகால் ஓடையின் மீது படுத்துத் தூங்கும் அவலம் நடந்தேறியிருக்கிறது.
விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடினமாக உழைக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள், வடிகால் ஓடையின் மீது படுத்து தூங்கிக் கொண்டிருப்பது, ஒவ்வொரு பெற்றோரையும் கண்கலங்கச் செய்யும். ஆனால், இன்னார் மகன் என்ற தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லாத தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கோ, விளையாட்டுத் துறை அமைச்சருக்கோ, பள்ளிக் குழந்தைகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழகத்தின் பெற்றோர்கள், தங்கள் சுய உழைப்பில், தங்கள் சுக துக்கங்களைத் தியாகம் செய்து, தங்கள் குழந்தைகளை, தேசத்தைப் பெருமைப்படுத்தும் விளையாட்டு வீரர்களாக உருவாக்கினால், அங்கு சென்று வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதைத் தவிர, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் விளையாட்டுத் துறை மேம்பட திமுக செய்தது என்ன?
தமிழகம் முழுவதும் தகுதியான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, தேசிய அளவில், சர்வதேச அளவில் அவர்களைக் கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்காமல், பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகளைக் கூட சரிவர வழங்காமல், திமுக பொதுக்கூட்டத்துக்கு வரும் கட்சிக்காரர்களை விட தரக்குறைவாக, சின்னஞ்சிறு குழந்தைகளையும், பெற்றோர்களையும் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழக விளையாட்டு வீரர்களின் நிலையே இத்தனை மோசமாக இருக்கையில், மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி தருகிறோம் என்ற பெயரில் சிலரை வரவழைத்து, அவர்களுக்குத் தங்கும் இடம், உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து, சில நாட்களில் அவர்களை திருப்பி அனுப்பி வைத்திருப்பது வீண் விளம்பரமே அன்றி வேறென்ன? அவர்களுக்கு, இங்கு, என்ன பயிற்சிகள் வழங்கப்பட்டன? எத்தனை நாட்களுக்கு வெறும் விளம்பரத்திலேயே அரசை நடத்துவீர்கள்?
தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களின் தேர்ச்சி முறையும் சரிவர நடைபெறவில்லை, ஒவ்வொரு விளையாட்டுக்கும், தகுதியானவர்களைக் கொண்டு, தகுதியான வீரர்களைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு சிலரின் விருப்பத்திற்கேற்ப பாரபட்சமாக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் பெற்றோர்கள் வைத்திருக்கிறார்கள்.
திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுத்து, தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பாமல், கண்துடைப்புக்காக தேர்ச்சிப் போட்டிகள் நடத்தி, ஒட்டு மொத்த விளையாட்டுத் துறையையும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக. வாய்ப்புகளையும் வழங்காமல், வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்காமல், சுய உழைப்பில் சாதிக்கும் விளையாட்டு வீரர்களின் மீது, தங்கள் சாதனை என்று சொந்தம் கொண்டாட, திமுகவுக்கு எந்தக் காலத்திலும் தகுதி இல்லை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.