டெல்லி நிஜாமுதீன் விவகாரம்... யாரும் மத பிரச்னையாக்க வேண்டாம்... பாஜக தலைவர் முருகன் அதிரடி அறிக்கை!

By Asianet TamilFirst Published Apr 1, 2020, 6:57 PM IST
Highlights

தமிழக அரசின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

டெல்லி நிஜாமுதீன் விவகாரத்துக்குள் அரசியல் மத பிரச்னைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுப்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லி நிஜாமுதீனில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்ற பலரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையாகிவரும் நிலையில் தமிழக பாஜக  தலைவர் முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தியாவில் கொரோனாவின் பரவலைத் தடுத்திட மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழக அரசு துரித கதியில் இயங்கி வருகிறது. இந்தியாவுக்கும் கொரோனாவுக்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்து வருவதைப்போல நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கொரோனாவை வீழ்த்திட முதல் நடவடிக்கை அவரவர் வீடுகளில் தனித்திருத்தல்தான். இதை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.


இந்த நிலையில் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சென்றிருந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமிழகம் திரும்பி இருப்பதாக தெரியவருகிறது. மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டினரும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பாமல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்குச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. மாநாட்டின் போதும் பயணத்தின் போதும் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரால் சிலரை தொடர்பு கொள்ள முடிந்தது என்றும் சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியானதால், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசும் மக்கள் நலன் கருதி இவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இதில் அரசியல் மத பிரச்சினைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புகிறேன்” என்று முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!