பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் தான் பதிண்டா இராணுவ முகாமில் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அண்ணாமலை பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய இராணுவ முகாம் பஞ்சாப்பில் தான் அமைந்துள்ளது. பதிண்டா என அழைக்கப்படும் அந்த இராணுவ முகாமில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 4 இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். பலியான 4 பேரில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் தேனி மாவட்டம் மூணாணம்பட்டியை சேர்ந்த லோகேஷ். மற்றொருவர் சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியை சேர்ந்த கமலேஷ்.
பதிண்டா இராணுவ முகாமில் நடந்த இந்த தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், இதற்கு தீவிரவாதிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்த பஞ்சாப் காவல்துறை, இதன் பின்னணியில் இராணுவ வீரர்கள் சிலர் இருக்கலாம் எனவும் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு செல்லுங்கள்! அதிமுகவின் ஊழலும் வெளியிடப்படும்! இபிஎஸ்-ஐ மிரட்டும் அண்ணாமலை?
இதனிடையே, பதிண்டா இராணுவ முகாம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களான சேலத்தைச் சேர்ந்த கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் ஆகியோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மற்றும் அவர்களோடு வீரமரணம் அடைந்த இரண்டு இராணுவ வீரர்கள் ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வீர வணக்கம்!” என குறிப்பிட்டு இருந்தார்.
பதிண்டா இராணுவ முகாமில் நடந்த தாக்குதலுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஏற்கனவே பஞ்சாப் காவல்துறை விளக்கம் அளித்த பிறகும், இராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த ஒரு மாநிலத்தின் தலைவரே இப்படி பதிவிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... பதிண்டா ராணுவ முகாமில் நடந்தது என்ன? வெளியானது புதிய தகவல்கள்!!