
திமுக ஊழல் பட்டியல்
சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ‘ கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அம்மா நியூட்ரிஷியன் கிட் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பின்னர், அம்மா என்ற பெயர் நீக்கம் செய்யப்பட்டு 'நியூட்ரிஷியன் கிட்' என்ற பெயரில் கிட் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கிட் தொகுப்பில் 31.02.2022 அன்றைய முடிவின்படி, ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்பட முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு 23.88 லட்சம் நியூட்ரிஷியன் கிட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஏப்ரல் மாதம் திமுக எம்எல்ஏ மகன் உள்ளிட்ட சிலரின் நிர்பந்தம் காரணமாக மறுபடியும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் நீக்கம் செய்யப்பட்டு தனியார் நிறுவனமான ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்பட்டது. ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்கின்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் ரூ.77 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் புரோ பி.எல்.மிக்ஸ்க்கான டெண்டரையும் ரத்து செய்து ஆவின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அடியோடு அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்தையுமே ஜி ஸ்கொயர் என்ற நிறுவனம் மட்டுமே இரண்டு, மூன்று நாட்களில் அனுமதி பெற்று அனைத்தையும் விற்கத்தொடங்கியுள்ளது. இதனால் ஒரு குடும்பம் மட்டுமே முன்னேறும். மற்ற குடும்பத்தினர் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன’ என்று பல்வேறு குற்றசாட்டுகளை வைத்தார்.
பாஜக புகார்
இந்நிலையில் தாய் - சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகம் கொள்முதலில் முறைகேடு தொடர்பாக பாஜக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஆர். சி. பால் கனகராஜ் தலைமையில், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வணங்காமுடி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் பி. கந்தசாமியிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், முறைகேடுகள் தொடர்பாக விரிவாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்படி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை சந்தித்து, அம்மா ஹெல்த் கிட் முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்தோம்.
பாலூட்டும் பெண்களுக்கு 8 வகையான ஊட்டச்சத்துப் பொருட்கள் கொண்ட 23 லட்சம் நலப் பெட்டகம் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், இவற்றை ஆவின் நிறுவனத்திடம் வாங்காமல், தனியாரிடம் வாங்கியுள்ளனர். இதில் 50 சதவீதம் விலை வித்தியாசம் உள்ளது. எனவே, இந்த முறைகேட்டைக் கண்டுபிடித்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளோம். இது தொடர்பான விசாரணையின்போது, உரிய ஆதாரங்கள் அளிக்கப்படும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : "இனி ஜி ஸ்கொயர் முத்துசாமி தான்.. பழைய சேகர்பாபுவை காட்டுங்க பார்க்கலாம்" மார்தட்டும் அண்ணாமலை !
இதையும் படிங்க : DMK: திராவிட மாடல் போய்.. காட்டுமிராண்டி மாடல் ஆகிவிடும் - எச்சரிக்கும் டிடிவி தினகரன் !!