
கட்சி தலைமையின் கட்டுப்பாடுக்கும், கண்ணியத்துக்கும் சவால் விடுவது போல் செயல்படுபவர்களை ‘துரோகிகள்’ என்று குறிப்பிட்டு ஸ்டாலின் ஆவேசமாய் வறுத்தெடுத்திருக்கும் விஷயம்தான் தி.மு.க.வின் தற்போதை பரபரப்பே.
கோயமுத்தூர் மாவட்டத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ் மணி என்பவர் சமீபத்தில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினாராம். அப்போது அவருக்கு எதிகோஷ்டியினர் எழுந்து நின்று ஓவர் ரவுசு விட்டிருக்கிறார்கள்.
இதற்கு தமிழ்மணியின் ஆதரவுப்புள்ளிகள் எதிர் குரல் கொடுத்திருக்கிறார்கள். விவகாரம் முற்றி, ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை மாறியிருக்கிறது.
ஆவேசப்பட்ட எதிரணி மாவட்ட செயலாளர் மீது கை வைக்குமளவுக்கு நெருங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாய் களேபரத்துடன் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துவிட்டது.
நடந்த களேபரங்களை நொடி பிசகாமல் மொபைலில் வீடியோ செய்திருக்கின்றனர் சில தி.மு.க.வினர். அதை அப்படியே வாட்ஸப்பில் பகிர்ந்து வைரலாக்கியிருக்கின்றனர்.
காங்கிரஸுக்கே சவால் விடுற அளவுக்கு கோஷ்டி சண்டையில பின்னுறீங்களே பாஸ்’ என்று எதிர்கட்சியினர் இதற்கு நக்கல் கமெண்ட்ஸ் போட்டு தாளித்திருக்கின்றனர்.
இந்த வீடியோ விவகாரம் ஸ்டாலினின் கவனத்துக்கும் போயிருக்கிறது. ஆலோசனை கூட்டம் அடிதடி கூட்டமாய் மாறியிருப்பதை பார்த்து டென்ஷனான அவர் “உட்கட்சியில் இருந்து கொண்டு, கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு சவால் விடுபவர்களே நமது துரோகிகள். இவர்களை அடையாளம் கண்டு உடனடியாக களையெடுக்க வேண்டும்.
மாவட்ட செயலாளர்களை விமர்சிப்பது, தலைமையையே விமர்சிப்பதற்கு ஈடானது. இந்த துரோகிகளின் செயல்களுக்கும் ஒரு எல்லை உண்டு.’ என்று மிக ஆவேசமாக கருத்துக்களை கொட்டியிருக்கிறார்.
ஸ்டாலினின் கோபத்தை மொத்தமாக வாங்கிக் கட்டியிருக்கும் கோயமுத்தூர் தெற்கு மாவட்ட கலக தி.மு.க.வினர் கூடிய விரைவில் களையெடுக்கப்படலாம் எனும் தகவல் தடதடத்துக் கிடக்கிறது.
ஆக உட்கட்சி அதிரடிக்கு தயாராயிட்டார் போல தளபதி!