
இன்றைய தேதிக்கு ‘ஹாட்டஸ்ட் சர்வே’ என்றால் அது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதுதான்! பிரபல புலனாய்வு வாரம் இருமுறை இதழொன்று ரஜினியை மையமாக வைத்து விறுவிறு சர்வே ஒன்றை நடத்தியது. இதன் முதல் பாகத்தில் ரஜினி உள்ளிட்ட தமிழகத்தின் பல தலைவர்களின் பெயர்களும் சர்வேயின் அலசலில் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இரண்டாவது பாகத்தில் முக்கியமாக ரஜினியை குறிவைத்தே கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதன் ரிசல்ட் இப்படியாக வந்திருக்கிறது...
* தமிழ்நாட்டில் ரஜினியால் மாற்றத்தை கொண்டு வர முடியுமா?
- எனும் கேள்விக்கு ஆம் என்று வெறும் முப்பத்து இரண்டு சதவீதத்தினரும், இல்லை என்று அறுபத்து எட்டு சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் ஆம் என்று சொன்னவர்களில் ஆண்களின் சதவீதம் முப்பத்து ஒன்றுதான், பெண்களோ முப்பத்து நான்கு. இல்லை என்று சொன்ன ஆண்களின் சதவீதம் அறுபத்து ஒன்பது ஆனால் பெண்களோ அறுபத்து ஏழு. ஆக ஆண்களே ரஜினி மீது கடுப்பிலிருப்பதாக சர்வேயின் முடிவு சொல்கிறது.
* முதல்வராகும் தகுதி ரஜினிக்கு இருக்கிறதா?
- எனும் கேள்விக்கு ஆம் என்று முப்பத்து ஓரு சதவீதம் பேர் மட்டும் சொல்லியிருக்க, ஐம்பத்து ஓரு சதவீதம் பேர் இல்லை என சொல்லியிருக்கின்றனர். இதிலும் ரஜினியை ஆதரித்த ஆண்களை விட பெண்களின் சதவீதம் அதிகம்.
* ரஜினி கட்சி 2021-ல் ஆட்சியைப் பிடிக்குமா?
- என்கிற கேள்விக்கு, ஆட்சியைப் பிடிக்கும் என இருபத்து ரெண்டு சதவீதம் பேரும், கூட்டணி சேர்ந்தால் வாய்ப்பு இருக்கிறது என முப்பத்து ரெண்டு சதவீதம் பேரும், தோற்கும் என இருபத்து நான்கு சதவீதம் பேரும், டெபாசிட் இழக்கும் என இருபத்து ரெண்டு சதவீதம் பேரும் சொல்லியிருக்கிறார்கள்.
* மீண்டும் ஒரு நடிகர் ஆட்சிக்கு வரலாமா?
- எனும் கேள்விக்கு வரலாம்! என முப்பத்து எட்டு சதவீதம் பேரும், வரவேண்டாம்! என நாற்பத்து நான்கு சதவீதம் பேரும் சொல்லியிருக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக சர்வே முடிவை பார்க்கும்போது அரசியல்வாதி ரஜினிக்கு ஆஹா! ஓஹோ! என்று தமிழகத்தில் புகழோ, வரவேற்போ இல்லை என்பது தெளிவாகிறது. ஆனாலும் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு தி.மு.க.வுக்கு முழு சவால் கொடுக்கிறார் அவர் என்பது புலனாகிறது.
சிம்பிளாய் சொல்லப்போனால் இன்றைய தேதிக்கு மக்களின் கருத்துப்படி...முதல்வர் நாற்காலியை நோக்கி ஓடும் ஸ்டாலினை சில அடிகள் பின்னே முந்த முயல்வது ரஜினிதான் என்பதே சர்வே காட்டும் முடிவு.
இனி கமல் களத்தில் இறங்கிய பின் நிலவரம் என்னவாகுமோ?!