உக்ரேனில் இருந்து வந்தவர்கள் இனி திருப்பி போக மாட்டாங்க.. இங்கேயே படிக்க ஏற்பாடு பண்ணுங்க.. சீமான் நெருக்கடி.

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2022, 12:42 PM IST
Highlights

இதனால் மாணவர்களின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.மேலும், தாயகம் திரும்புவதற்காக மாணவ, மாணவியர் பெரும் பண இழப்பை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக பெற்ற வங்கி கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். 

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இனி எப்போது வேண்டுமானாலும் அங்கு போர் ஏற்படலாம் என்ற சூழல் உள்ளதால் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் உக்ரைனுக்கு அனுப்ப தயங்குகின்றனர். எனவே அம்மாணவர்கள் நாட்டிலேயே மருத்துவ படிப்பு உள்ளிட்ட உயர் கல்வி தொடர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா- உக்ரேன் போர்:

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கடுமையான போர் நீடித்து வருகிறது. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் எல்லையோர நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். முன்னதாக  உக்ரைனுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட  உயர்கல்வி படிக்க சென்ற இந்திய மாணவர்கள் அங்கு சிக்கி தவித்து வந்த நிலையில் மத்திய அரசு அவர்களை பத்திரமாக மீட்டு நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது. போருக்கு இடையிலும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உக்ரேனில் இருந்து மீட்டுவரப்பட்டுள்ளனர்.  தற்போது அங்கு போர் சூழல் நிலவுவதால் உயர்கல்வி பாதியிலேயே கைவிட்டு மாணவர்கள் திரும்பியுள்ளனர்.

மன உளைச்சலில் மாணவர்கள்: 

இதனால் மாணவர்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே கல்வியை விட்டு பாதியில் திரும்பிய மாணவர்களில் நம் நாட்டிலேயே அப்படிப்புகளை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ள மாணவர்களுக்கு நாட்டிலேயே கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;  உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர்பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் தொடர இந்திய மருத்துவக் கழகம் உரிய அனுமதியளிக்க வேண்டும்.

கல்வி தொடர உதவி செய்யுங்கள்: 

நீட் தேர்வு காரணமாகவும், மிக அதிகக் கல்விக் கட்டணம் காரணமாகவும், இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், உக்ரைன் நாட்டிற்குச் சென்று மருத்துவம் படித்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் தற்போதைய கடும்போர் காரணமாகத் தாயகம் திரும்ப வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மிக ஆபத்தான போர் தாக்குதல்களிலிருந்து ஊன், உறக்கமின்றி, மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ள மாணவச் செல்வங்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, மருத்துவக் கல்வியை மீண்டும் தொடர முடியுமா? என்ற ஐயத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். தற்போதைய சூழலில் ரஷ்ய – உக்ரைன் போர் விரைவில் முடிவுற்றாலும், எதிர்காலத்தில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் மூளக்கூடிய பதட்டமான அரசியல் சூழலே நிலவுவதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீண்டும் உக்ரைன் நாட்டிற்கு அனுப்பத் தயங்குகின்றனர். 

வங்கி கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்:

இதனால் மாணவர்களின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், தாயகம் திரும்புவதற்காக மாணவ, மாணவியர் பெரும் பண இழப்பை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக பெற்ற வங்கி கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
 

click me!