சின்னம்மா ரிட்டர்ன்ஸ்.. 'கொங்கு' மண்டலத்தில் கால்பதிக்கும் சசிகலா.. எடப்பாடிக்கு ஆப்பு ரெடி !!

By Raghupati RFirst Published Mar 9, 2022, 12:18 PM IST
Highlights

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.கவில் சசிகலாவை இணைப்பது தொடர்பான பேச்சு எழுந்தது. ஆனால், அதற்கு கட்சியின் முக்கியத் தலைவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. அடுத்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை சந்தித்தது. 

தென் மாவட்ட சுற்றுப்பயணம் :

தொடர்ந்து தொண்டர்களிடம் பேசி வந்த சசிகலா, கடந்த டிசம்பர் மாதம் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை சசிகலா எழுதியிருந்தார். அதில், `உங்கள் நம்பிக்கை வீண் போகாது. நீங்கள் அனைவரும் சோர்ந்து போகாமல் தைரியமாக இருங்கள். ஒரு சிலருடைய தேவைக்காகவும் விருப்பு வெறுப்புக்காகவும் செயல்பட்டு வரும் நமது இயக்கத்தை சரிசெய்து மீண்டும் தொண்டர்களுக்கான இயக்கமாகவும் தலைவர்கள் வகுத்த சட்டதிட்டங்களை அவர்கள் முன்னெடுத்த அதே பாதையில் பிறழாமல் நமது இயக்கத்தைக் கொண்டு செல்வோம்' எனக் கூறியிருந்தார்.

`அ.தி.மு.க பொதுச் செயலாளர்' எனக் குறிப்பிடப்பட்ட லெட்டர்பேடில் அவ்வப்போது அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக, `கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க, அ.ம.மு.கவை இணைக்க வேண்டும்' என்ற தீர்மானம் தேனி மாவட்ட அ.தி.மு.கவில் நிறைவேற்றப்பட்டது. 

அதுவும் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடந்த கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூரில் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பும் விவாதப் பொருளாக மாறியது. இதனையடுத்து ஓ.ராஜாவை கட்சியில் இருந்தே நீக்கி ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டனர்.

சாதி பலம் :

சமீபத்தில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பினார். சசிகலாவுக்கு தென் மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கிறது. அவரது சமூகத்தினரும் அங்கு கணிசமாக உள்ளனர். உண்மையில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளதற்கு காரணம் தனக்கான செல்வாக்கை அறிவதற்காகத்தான் என தகவல் கூறப்படுகிறது.

கொங்கு மண்டலம் :

இந்த நிலையில், நெல்லை,தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஆன்மீக தரிசனம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பை முடித்துக் கொண்ட சசிகலா, அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

இந்த சுற்றுப்பயணத்தை சேலத்தில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆன்மிக பயணமாக இருந்தாலும், அரசியல் பயணமாக இருந்தாலும் இந்த பயணம் சசிகலாவுக்கு கை கொடுக்குமா? அதிமுகவில் சசிகலா மீண்டும் சேர்க்கப்படுவாரா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. அதுமட்டுமின்றி எடப்பாடி கோட்டையில் அவரது பலத்தை மீறி சசிகலா செல்வாக்கு உயருமா ? என்று கேள்விகள் எழுந்து இருக்கிறது.

click me!