எம்.பியாக நான் தொடரக்கூடாது என நினைத்தவர்களுக்கும், வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்களுக்கும் நன்றி-திருநாவுகரசர்

By Ajmal Khan  |  First Published Mar 31, 2024, 11:45 AM IST

இத்தேர்தலில்  நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும்,  நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  கிட்டாமல் போக  முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 


திருநாவுக்கரசர் அறிக்கை

     திருச்சி நாடாளுமன்ற தொகுதி இந்த முறை திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக அந்த தொகுதியும் ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் திருநாவுகரசர் இருந்து வந்தார். இந்தநிலையில் திருச்சி தொகுதி மக்களுக்கு தனது எம்பி பதவி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

அதில்,  திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வணக்கத்திற்குரிய வாக்காளப் பெருமக்கள், 17-வது பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித் தந்து மொத்தத்தில் பதிவான 10,48,779 வாக்குகளில் கூட்டணி வேட்பாளரான எனக்கு மட்டும் 6,29,285 வாக்குகள்,

pic.twitter.com/hfPdafi4LV

— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC)

 

 அதாவது இத்தொகுதியில் அனைத்து கட்சிகளுக்கும் பதிவான மொத்த 100 சதவிகித வாக்குகளில் சுமார் 60 சதவிகித வாக்குகளை  தாராளமாய் தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புகுண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது. 288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.  

திருச்சி தொகுதிக்கு செய்து கொடுத்த திட்டங்கள்

திருச்சியில் செயல்பட்ட எனது நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்தும், சென்னை, டெல்லி அலுவலகத்தில் இருந்தும் எனது   சுற்றுப்    பயணத்திலும்,  மக்கள்      அலுவலகம் வந்தும்,  அனுப்பிய வகையிலும்,   பெறப்பட்ட சுமார் பத்தாயிரம் மனுக்களை மத்திய – மாநில அமைச்சர்களுக்கும், உரிய  அரசு துறைகளுக்கும்  அனுப்பி, பல்வேறு விதமான நலப் பணிகளை செய்துள்ளேன்.  அதேபோல் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளேன். தேர்தல் வாக்குறுதியான, சுமார் 10 ஆண்டு காலமாக முடிவு பெறாமல் ”தொங்கு பாலம்” என்று சொல்லப்பட்டு வந்த ஜங்ஷன் மேம்பாலத்திற்கு ராணுவ இடம் பெறப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை பெற்று தந்துள்ளேன். 

 பாராளுமன்றத்தில் 70 சதவிகித வருகைப் பதிவோடு,   37  விவாதங்களில் பங்கேற்றுள்ளேன்.  ஜீரோ அவர், விதி எண் 377 மற்றும்  358 வினாக்கள்  4 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன்.  ஜாதி மத எல்லைகளை கடந்து குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை ஆண் – பெண் என அனைவரும் இத்தொகுதியில் நான் சுற்றுப் பயணம் செய்கிற போது என் மீது காட்டிய அளப்பரிய பாசமும், அன்பும் என் உள்ளம் முழுவதும் நிறைந்து என்றென்றும் பசுமையாய்  எப்போதும்  நிலைத்து நினைவில் இருக்கும். இத்தொகுதியில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இத் தொகுதி மக்களுக்காக எனது பணி எப்போதும் தொடரும்.


      
    மக்கள் பணி தொடரும்

  திருச்சியை இரண்டாவது தலைநகராக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.  தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை மையமாகக் கொண்டு எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். மக்கள் என்னை எப்போதும் சந்திப்பது போலவும், தொலைபேசி வாயிலாகவும், திருச்சி அலுவலகத்திலும் எப்போதும் போல்  என்னை சந்திக்கலாம். தொடர்பு கொள்ளலாம். கடந்த சுமார் 47 ஆண்டுகளாக எனக்குள்ள மத்திய – மாநில அரசுகளின் தொடர்பு, அனுபவம் ஆகியனவற்றின் அடிப்படையில் முடிந்த  நன்மைகளை திருச்சி தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும்  தொடர்ந்து செய்து பணியாற்றுவேன்
 
      1977-ல் அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆா் அவர்களால் சட்டமன்ற உறுப்பினரான அந்த காலம் தொட்டு மத்திய மாநில பொறுப்புகளில் இருந்தும், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், எந்த அரசு பொறுப்புகள் வகிக்காத காலங்களிலும்  பொது மக்களின் நலனுக்கான பணிகளை  ஆற்றுவதில் இருந்தும் மக்கள் தொடர்பில் இருந்தும் எப்போதும் நான்  ஓய்வு பெற்றதே இல்லை.  என் வாழ்நாளில்,   என் இல்லத்தில்  நான் இருந்த நாட்களை காட்டிலும் மக்களோடு நான் இருந்த நாட்களே அதிகம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பல முறை சுற்றி வந்து மக்களை சந்தித்துள்ளேன். எனது  மக்கள் பணி தொடரும்.


 
 எம்பியாக தொடரக்கூடாது என நினைத்தவர்களுக்கு நன்றி

நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டபோது உதவிய, துணை நின்ற மாநில – மத்திய அரசு அலுவலர் பெருமக்கள், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட, தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு பொது நல சங்கங்கள், அமைப்புகள், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், பொதுமக்கள் என ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பெருமக்களுக்கும் எனது கோடான கோடி நன்றி.  இத்தேர்தலில்  நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும்,  நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  கிட்டாமல் போக  முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 
 “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,  தர்மம் மறுபடியும் வெல்லும்.” மீண்டும் தொகுதி மக்களுக்கு, நன்றியும், வாழ்த்தும், வணக்கமும் என திருநாவுகரசர் பதிவு செய்துள்ளார். 

இதையும் படியுங்கள்

திமுக கடவுளை திட்டிக்கிட்டே சாமி கும்பிடும்! பாஜக கடவுளே திட்ற அளவிற்கு சாமி கும்பிடும்! பங்கம் செய்த விந்தியா
 

click me!