அரசியல் சூனியம் ஏற்படுத்தினாலும் பா.ஜ.க மற்றும் பா.ம.க.வோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற பதற்றம் உருவாகும்
சாதிய வன்முறை சம்பவங்களை கண்டித்தும், சாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, திருமோகூரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருகை தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆனால், நான் அங்கு சென்றால் தேவையற்ற பதற்றம் உருவாகும்.
இதனால், உழைக்கும் மக்கள் இரு தரப்பிலும் இருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அங்கு செல்லவில்லையென தெரிவித்தார். இதனை மற்ற சமூகத்தினரும் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த கிராமத்திற்கு எதிராக திரும்பிவிடுவதாகவும் விமர்சித்தார்.
பாஜக, பாமகவோடு கூட்டணி இல்லை
விடுதலை சிறுத்தைகள் சார்பாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர், தி.மு.க.விற்கு எதிராகவும் முதலமைச்சருக்கு எதிராகவும் நடத்துவதாக கூறி தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பார்ப்பதாக குற்றம்சாட்டினார். சனாதன சக்திகளை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும் என வலியுறுத்தியவர், அதற்காக தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி இருப்பது போல், இந்தியா முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிராக கூட்டணிகள் அமைய வேண்டும் அப்பொழுது தான் அதனை செயல்படுத்த முடியும் என கூறினார்.
தமிழகத்தில் விடுதலைசிறுத்தைகள் கொடி கம்பம் ஏற்ற விடாமல் போராட்டம் நடத்துங்கள் என்று பா.ம.க. தலைவர்கள் கூறுகின்றனர். வன்னிய சமூக மக்கள் ஏதோ ஒரு தூண்டுதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அரசியல் சூனியம் ஏற்படுத்தினாலும் பா.ஜ.க.வோடு, பா.ம.க.வோடு எந்த காலத்திலும் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வைக்காது என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கமா.? விடாப்பிடியாக இருக்கும் அதிமுக- நடக்கப்போவது என்ன.?