கூட்டணியை நம்பி அதிமுக இல்லை.. பாமக வெளியேறியதில் எந்த வருத்தமும் இல்லை.. செல்லூர் ராஜூ சரவெடி..!

By vinoth kumarFirst Published Sep 15, 2021, 12:51 PM IST
Highlights

கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற  தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும் . கூட்டணி என்பது தோளில் இருக்கும் துண்டுபோல தான். தேவையெனில்  போட்டுக்கொள்வோம், இல்லையெனில் கழற்றி விடுவோம் என கூறியுள்ளார். 

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் விடுப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்து அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது. மேலும், கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. கடந்த தேர்தல்களில் அதிமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட்டனர். இதுகுறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்ட போதும் அவரால் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் வெல்ல முடியுமா? என ராமதாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ;- அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் எந்த வருத்தமும் இல்லை. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற  தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும் . கூட்டணி என்பது தோளில் இருக்கும் துண்டுபோல தான். தேவையெனில்  போட்டுக்கொள்வோம், இல்லையெனில் கழற்றி விடுவோம் என கூறியுள்ளார். 

click me!