எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. என்னை புகழ்ந்தால் நடவடிக்கை எடுப்பேன். அதட்டிய ஸ்டாலின், அலறிய MLA க்கள்.

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2021, 1:36 PM IST
Highlights

உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறையாக இருக்கும், ஆனால் கேள்வி நேரத்திற்கும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. 

ஒவ்வொரு முறையும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டிய அவசியமில்லை, நேரடியாக பேச வேண்டிய விஷயத்தை பேசுங்கள் என முதல்வர் ஸ்டாலின் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற புகழுரைகள் அவையின் நேரத்தை வீணடிக்கும் என்பதால் அதை தவிர்க்குமாறு ஏற்கனவே அவர் எச்சரித்த நிலையில்,  இன்று மீண்டும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது முதல் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற அவர் எடுத்துவரும் முயற்சிகள் என அனைத்தும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் அவரின் கண்ணியம் மிக்க சட்டமன்ற செயல்பாடுகளும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கலாலேயே பாராட்டப்படும் அளவிற்கு இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களை புகழ்ந்து அவையில் பேச வேண்டிய அவசியமில்லை, அது சட்டமன்ற நேரத்தை வீணடிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். 

அதாவது  சட்டப்பேரவையில் நீதிமன்ற கட்டணம் தொடர்பாக திருத்த சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி நேற்று அறிமுகம் செய்தார். அப்போது மறைந்த முதல்வர் மு.கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியவர்களை அவர் வாழ்த்தி பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய நேரடியாக விஷயத்துக்கு வரவேண்டும் அதில் கேள்வி எழும் போது கூட சில வார்த்தைகளைச் சேர்த்து பேசலாம்,  திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நான் ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் உரையின் துவக்கத்தில் என்னையோ அல்லது நமது தலைவர்களையோ புகழ்ந்து பேசவேண்டிய அவசியமில்லை. 

உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறையாக இருக்கும், ஆனால் கேள்வி நேரத்திற்கும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. உறுப்பினர்கள் நேரத்தின் அருமையை கருதிப் பார்க்க வேண்டும் என எச்சரித்தார். ஒவ்வொரு முறையும் இதை அவையில் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என எச்சரித்திருந்தார். அதேபோல் இன்றும் சில எம்ஏல்ஏக்கள் ஸ்டாலினை புகழ்ந்து அவையில் பேசினார், அப்போது மீண்டும் குறுக்கிட்ட அவர், விவாதத்தின்போது என்னை புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மானிய கோரிக்கையின் போது நேரத்தில் அருமை கருதி அதை தவிர்க்க வேண்டும் என்று நேற்றே இதுகுறித்து நான் எச்சரிக்கை விடுத்தேன், ஆனால் இது இன்றும் தொடர்கிறது, எதையும் ஒரு லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள். 

அப்படி என்னை புகழ்ந்து பேசினால் நான் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்தார். அவரின் இந்த எச்சரிக்கையே கேட்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரண்டு போயுள்ள நிலையில், எதிர்கட்சி உறுப்பினர்கள் இப்படி ஒரு முதல்வரா என வாயடைத்து போயுள்ளனர்.
 

click me!