இந்தியாவுக்கு லாக் டவுன் தேவையில்லை.. வயிற்றில் பால்வார்த்த WHO.. ஆனால் இதை செய்தே ஆக வேண்டும்.

By Ezhilarasan BabuFirst Published Jan 19, 2022, 2:40 PM IST
Highlights

இந்தியாவில் முழு ஊரடங்கு தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளே போதுமானது என்றும், ஆபத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தியாவுக்கு முழு ஊரடங்கு தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளே போதுமானது என்றும், ஆபத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலையைக் காட்டிலும் தற்போது பரவி வரும் மூன்றாவது அலை வேகமாக பரவக்கூடியது என்றும் WHO ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஆனால் யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  கடந்த இரண்டு தினங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது அது மீண்டும்  ஏறு முகத்தை கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 23, 888 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பை கண்டறிய 1 லட்சத்து 43 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

நேற்று ஒரேநாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 15 ஆயிரத்து 36 பேர் வைரஸ் தொட்டியிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 8,305 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள WHO பிரதிநிதி ரோட்ரிகோ எச் ஆஃப்ரின் கூறுகையில், இந்தியா போன்ற ஒரு நாட்டில் நோய் பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு மற்றும் பயண தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் அதிக தீங்கு விளைவிக்குமே தவிற நன்மைகளை ஏற்படுத்தாது. தொற்றுநோயை எதிர்த்துப் போராட நோய் பரவலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்க உத்திகளை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.  அதேபோல் உயிர் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பை காப்பாற்றுவது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், இந்தியாவிலும் உலகமெங்கிலும் உள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை தீர்மானிக்க நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த நான்கு கேள்விகள்;-  பிறழ்வு வைரஸ் எவ்வளவு வேகமாக தொற்றக் கூடியது.? அது எவ்வளவு தீவிரமானது.? தடுப்பூசி மற்றும் கடந்த கால கட்டுப்பாடுகள் எவ்வளவு பாதுகாப்பாக அமைந்தது. சாதாரண மக்கள் ஆபத்தை உணர்ந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதே அந்த நான்கு கேள்விகள் ஆகும் இதற்கு பதில் தெரிந்தால் தற்போதுள்ள நிலைமையை எளிதாக கையாளலாம். முழு லாக்டவுன் விதிப்பதன் மூலம் நன்மைகளை தவிர தீமைகளே அதிகம் ஏற்படும். அதாவது பயணத்திற்கு முழுமையான தடை அல்லது மக்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவதை WHO பரிந்துரைக்கவில்லை என்றும் இத்தகைய தடைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், இந்தியா போன்ற ஒரு நாட்டில் மக்கள் தொகை பரவலில் அதிக வேறுபாடுகள் உள்ளன. தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறைகளை பின்பற்றுவதே சிறந்ததாக இருக்கும், தற்போதைய நிலைமையில் சுகாதாரத்துறையின் திறன்கள் மற்றும் சமூக பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொற்று நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை வழங்கியுள்ள அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டால் முழு ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியமில்லை, முகக்கவசம் பயன்படுத்துவது மற்றும் தடுப்பூசிகளை அதிகரிப்பது போன்ற பயனுள்ள நடவடிக்கைகளையே தற்போதைய சூழ்நிலையில் ஊக்குவிக்கவேண்டும். தற்போது உள்ள நடைமுறைகள் பலன் அளிப்பதாகவே  இருக்கின்றன என்றும் ஆஃப்ரின் கூறியுள்ளார். தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது  முகக்கவசம் பயன்படுத்துவதை உறுதி செய்வது, கை கழுவுவது, சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது, உட்புற இடங்களில் காற்றோட்டம் மற்றும் கூட்டத்தை தவிர்ப்பது ஆகியவை நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க உதவுகின்றன என்றும், இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றினாலே போதும், முழு ஊரடங்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
 

click me!