மாநில மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் பதவி தேவை தானா? ரவிக்கு எதிராக ரவுசு காட்டும் கே.எஸ்.அழகிரி.!

By vinoth kumarFirst Published Jan 19, 2022, 2:31 PM IST
Highlights

தமிழகத்தின் சார்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரமிக்க அளவில் பங்காற்றியவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

தமிழக சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது தமிழகத்தின் இறையாண்மைக்கும், மக்களின் விருப்பத்திற்கும் நேர் எதிரானதாகும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி தலையிடக் கோரி கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கிற உரிமை பறிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தற்போது நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிற வகையில் அலங்கார ஊர்திகள் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசின் பாதுகாப்புத்துறை மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டது. அந்த அடிப்படையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பெரும் பங்காற்றிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., தமது கவிதைகளால் விடுதலை வேட்கையை உணர்த்திய தேசிய கவி பாரதியார், கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வீரமிக்க போரை நடத்திய வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் சித்திரங்களை உள்ளடக்கிய அலங்கார ஊர்திகள் பங்கேற்பதை மத்திய அரசின் நிபுணர் குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. 

தமிழகத்தின் சார்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரமிக்க அளவில் பங்காற்றியவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்காற்றியவர் யார் என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மத்திய அரசின் சார்பான நிபுணர் குழு முடிவு செய்ய முடியாது. மத்தியில் மோடி ஆட்சி அமைந்தவுடன் ஒற்றை ஆட்சி மூலம், ஒற்றைக் கலாச்சாரத்தை மாநிலங்கள் மீது திணிக்கிற போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆதரவாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் போக்கை ஆளுநர் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான தமிழக சேர்க்கை மசோதாவை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் நிறைவடைந்தும் இது குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்தி வருகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா குறித்து ஆளுநர் முடிவு எடுப்பதற்குக் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி. வில்சனும் கோரிக்கை வைத்திருக்கிறார். 

காலம் தாழ்த்தும் ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆளுநர், அந்த மாநில மக்களின் நலன் சார்ந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருவது தான் நியாயமானதாகவும் முறையானதாகவும் இருக்கும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நிறைவேற்ற மசோதாவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டிருந்தார். அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து போராடிய பிறகு, ஒப்புதல் கொடுத்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் எத்தகைய வரையறையைப் பின்பற்றுகிறார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. தமிழக சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது தமிழகத்தின் இறையாண்மைக்கும், மக்களின் விருப்பத்திற்கும் நேர் எதிரானதாகும். 

இதன்மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கிற்கு ஆளுநர் துணை போகிறார். அதேபோல, வன்னியருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவை ஒப்புதல் தருவது போல் தந்து நீதிமன்றத்தால் ரத்து செய்ய காரணமாக இருக்கும் ஆளுநர், இது குறித்து சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து பெற்றாரா?  மாநில மக்களுக்கு எதிராகச் செயல்படும் போது, அந்த பதவி தேவை தானா? என்ற கேள்வி தானாகவே எழுகிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கின்ற வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய போக்குகள் மூலம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஜனநாயக முறையில் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!