சினிமாவில் கிடைக்கிற அளவுக்கு மீறிய புகழ், பணம் தான் இளம் நடிகர்கள் இந்த அளவிற்கு சீரழிவதற்கு காரணமாக இருக்கிறது. தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியருக்கு அழகாக இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்போது பெற்றோர்கள் பிரிவது அந்தப் பிள்ளைகளைதான் பாதிக்கும். அதனால் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாக்கும்.
தனுஸ் உள்ளிட்ட ஒவ்வொரு நடிகரும் சிவக்குமாரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், அந்த அளவிற்கு அவர் ஒழுக்கமாக வாழ்ந்ததால் தான் இன்றளவும் திரையுலகின் மார்கண்டேயனாக புகழப்படுகிறார் என தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகர் தனுசுக்கு அட்வைஸ் செய்துள்ளார். மனைவியை பிரிந்துவிட்டு தனுஷ் வாழ்நாள் முழுக்க தனியாகவே இருந்துவிட முடியுமா, தனது பிள்ளைகளுக்காக அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ஆகியோர் பிரிந்து வாழப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருவரின் இந்த அறிவிப்பு ரஜினியின் குடும்பத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. இதனால் உச்சக்கட்ட விரக்தியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா தனுஷ் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது. உண்மையில் அவர்கள் பிரிவதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இது ஒருபுறம் இருந்தாலும் 18 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு இப்படி திடீரென பிரிவது சரியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான் என்ற பதில்களும் வந்து சேர்கிறது. சமீபகாலமாக திரைப் பிரபலங்கள் விவாகரத்து செய்வது தொடர்கதையாகி வருகிறது.
நடிகை சமந்தா நாகசைதன்யா விவாகரத்து செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் இசையமைப்பாளர் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து திரை ரசிகர்கள் மீள்வதற்குள் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து அறிவித்துள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புகழ் வெளிச்சம் அளவுக்கு மீறிய பணம், அதிகார போதை திருமண உறவை துச்சமென தூக்கி எறியும் அளவிற்கு அவர்களின் மன நிலையை மாற்றி விடுகிறது என்றும் இந்த விவாகரத்துகள் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. விவாகரத்து செய்வதெல்லாம் அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை, படத்தில் மட்டும் தான் ஒழுக்க சீலர்களாக நடிப்பார்கள் ஆனால் உண்மையான வாழ்க்கையில் ஒழுக்கம் கிலோ எவ்வளவு என்று கேட்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
இவர்களைத்தான் தமிழ்ச் சமுதாயம் கொண்டாடி வருகிறது என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.ஆனால் பணம், புகழ் அதிகார போதை என அனைத்தையும் தாண்டி இல்லற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பண்பாடு கலாச்சாரம் மாறாமல் வாழும் நடிகர்களும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் நடிகர் சிவகுமார், சத்யராஜ், டி.ராஜேந்தர் பலரும் அதற்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் புகழ் போதைக்கு அடிமையாகி குடும்பத்தை தொலைப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை நிதர்சனமாக உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் பலரும் இந்த பிரிவு குறித்து பல வகைகளில் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள தயாரிப்பாளர் கே. ராஜன் இந்த பிரிவு என்பது ஏற்பட்டிருக்க கூடாது, ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர், நாகரீகமானவர் அவருக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டிருப்பதை எண்ணி வருந்துகிறேன்.
சினிமாவில் கிடைக்கிற அளவுக்கு மீறிய புகழ், பணம் தான் இளம் நடிகர்கள் இந்த அளவிற்கு சீரழிவதற்கு காரணமாக இருக்கிறது. தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியருக்கு அழகாக இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்போது பெற்றோர்கள் பிரிவது அந்தப் பிள்ளைகளைதான் பாதிக்கும். அதனால் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாக்கும். இந்நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அவரது தாயார் தனுசுக்கு அறிவுரை கூறி சேர்த்து வைக்க வேண்டும். தனுஷின் அண்ணனும் இதேபோல்தான் ஒரு நடிகையை திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்தார். இப்போது இன்னொரு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள், ஒரு பெண்ணை அனுப்பி விட்டு இன்னொரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்றும் எனக்கு தெரியாது. அண்ணனைப் போலவே இன்னொரு பெண்ணை தேடாமல் தனுஷ் இருக்க வேண்டும். தனுஷ் வாழ்நாள் முழுவதும் இன்னொரு பெண்ணை தேடாமல் தனியாகவே இருந்து விடுவாரா.?
மனைவி இருக்கும்போதே கிசுகிசு வருகிறது. மனைவியை பிரிந்து விட்டால் இது அதிகமாகதான் வரும், அது தனுஷுக்கு மேலும் அவப்பெயரைதான் ஏற்படுத்தும். திரையுலகில் சிவகுமாரை அனைவரும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும், அவர் எவ்வளவு ஒழுக்க நெறியோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் பார்க்க வேண்டும். 80 வயது நெருங்கி விட்டது இன்னும் இளைஞராக இருக்கிறார், இன்னும் எந்த விமர்சனத்துக்கும் ஆளாகாமல், திரையுலக மார்கண்டேயன் என பெயர் எடுக்கிறார் என்றால் அதற்கு அவரின் ஒழுக்கம்தான் காரணம். தனுஷ் போன்றோர் அது போல வாழ வேண்டும், சிறு சிறு தவறுகள் செய்தால் அது யாருக்கும் தெரியாமல் செய்தால் அதை விட்டும் ஒதுங்கி விட வேண்டும். ஒழுக்கம் இல்லை என்றால், பெயர் கெட்டுப் போனால், எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும் பிரயோஜனம் இல்லை. இவ்வாறு ராஜன் கூறியுள்ளார்.