தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அனுமதிக்கமாட்டோம் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்ட நிலையில் இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாது அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான கர்நாடக அரசு விரைவில் மேகதாது அணை கட்ட வேண்டுமென வலியுறுத்தி மேகதாதுவில் இருந்து பெங்களூருவுக்கு 11 நாட்கள் பாதயாத்திரை தொடங்கியுள்ளது.
இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடைபயணம் தொடங்கினர். இருப்பினும் சித்தராமையாவுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டதால் அவர் பாதியில் கிளம்பிச் சென்றார். இதனிடையே கர்நாடகாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற சூழலில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ள பாதயாத்திரை நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி விதிகளை மீறி மேற்கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கஜ்ரோல் எச்சரித்துள்ளார். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையானது அரசியல் யாத்திரை எனவும் அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றும் வகையில் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக விவசாயிகளிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது.
திருவாரூரில் இருந்து மேகதாது அணை நோக்கி நீதி கேட்டு பயணம் தொடங்கியுள்ள தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று தஞ்சை வந்தடைந்தார்.அப்போது பேசிய அவர், ‘ மேகதாது அணை எதிர்ப்பு விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் காங்கிரசும்-பாஜகவும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு காவிரியின் குறுக்கே அணையை கட்ட முயற்சிப்பதாக தெரிவித்தார்.
மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற முழக்கத்தை காங்கிரஸ் கைவிடாவிட்டால் ராகுல், பிரியங்கா, சோனியா ஆகியோர் தமிழகம் வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை இனி தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட நிலைதான் ராகுல் காந்தி சோனியா காந்தி பிரியங்கா காந்திக்கு ஏற்படுமென மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடங்கியுள்ள பேரணியில் பிஆர் பாண்டியன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் இனி அனுமதிக்கமாட்டோம்’ என்று கூறினார். இந்த செய்தி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பெரும் தலைவலியை கொடுத்து இருக்கிறது.