நீட் விலக்கு மசோதா குறித்து அமித்ஷா முடியாதுன்னு சொல்லல.. இதுவே சூப்பர் தான்.. மார்தட்டும் மாசு.

By Ezhilarasan BabuFirst Published Jan 19, 2022, 12:49 PM IST
Highlights

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்தேர்வு சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசும்போது, சம்பந்தப்பட்ட மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரை கலந்தாலோசித்து கூறுவதாக தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வு சம்பந்தமாக உள்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவிக்கிறோம் என்று கூறியிருப்பது நல்ல முன்னேற்றம்தான் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீண்ட இழிபறிக்குப் பின்னர் தமிழக எம்.பிக்கள் குழு அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில் மா.சு இவ்வாறு கூறியுள்ளார். 

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது. அதை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டாலும் தமிழகம் தொடர்ந்து இத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மாணவர்கள் தற்கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்வு தமிழக ஏழை, எளிய கிராமபுற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கிறது என்பதுதான் இந்த தேர்வு  மீதான குற்றச்சாட்டு. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நீட் விலக்கு தொடர்பாக  தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆளுநர் அதன்மீது பாராமுகமாக இருந்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக எம்பிக்கள் குழு குடியரசு தலைவரை சந்திக்க முயற்சித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில்  தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சரை சந்திக்க அப்பாயின்மென்ட் பெற்றனர்.

ஆனால் அமித்ஷா உத்திரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றதால் அவரை சந்திக்க முடியாமல் போனது. ஆனால் தமிழக எம்பிக்கள் பல மணி நேரம் அவரது அலுவலகத்தில் காத்திருந்து பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதை தொடர்ந்து அமித்ஷாவை சந்திப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுமென்றே தமிழக எம்பிக்களை சந்திக்க மறுக்கிறார் என்று டி.ஆர் பாலு உள்ளிட்டோர் செய்தியாளரை சந்தித்து பரபரப்பு குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி தமிழக எம்பிக்களை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கினார். இந்நிலையில் தமிழக எம்பிக்கள் குழு அவரை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மனுவை அளித்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்துபேசி உடனடியாக முடிவெடுத்து என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக முதல்வரிடம் தெரிவிப்பதாக அப்போது உள்துறை அமைச்சர் தெரிவித்தாக எம்பிக்கள் கூறியிருந்தனர். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்தேர்வு சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசும்போது, சம்பந்தப்பட்ட மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரை கலந்தாலோசித்து கூறுவதாக தெரிவித்திருக்கிறார். இது ஒரு நல்ல மாற்றம், 
முடியாது என்று கூறாமல் சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறியிருப்பது நல்ல முன்னேற்றம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நானும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தபோது தமிழ்நாட்டில் மட்டுமல்ல நான் சார்ந்திருக்கிற ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்ற கருத்தை அவர் பதிவுசெய்தார். எனவே உள்துறை அமைச்சர் கூறியது போல சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசுகையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் நல்ல பதிலை தருவார் என்று எதிர்பார்க்கிறோம் என மா.சு கூறினார். நீட் தேர்வு குறித்து அடுத்தடுத்த முடிவுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த சூழ்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கும் இந்த கருத்து முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றார். 
 

click me!