அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் சுமார் 13 மணி நேர சட்ட போராட்டத்திற்கு பிறகு, பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிக்கை
அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போதும் நடைபெறுவதை விட பரபரப்பாக இந்த முறை நடைபெறவுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் நிரந்தர ஒற்றை தலைமையாக இருந்தார். அவரது மறைவிற்கு பிறகு யார் கட்சியை கைப்பற்றுவதில் தொடங்கிய பிரச்சனை 5 ஆண்டுக்ள ஆகியும் இன்னமும் முடிவடையவில்லை, அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து ஒற்றை தலைமை முழக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தற்போது நடத்த வேண்டாம் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். ஆனால் இதனை ஏற்காத இபிஎஸ் தரப்பு திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது. இந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து கடைசி ஆயூதமாக நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு நம்பியது. நேற்று காலை நடைபெற வேண்டிய வழக்கு விசாரணை நேற்று மதியம் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மான நகல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 23 தீர்மானங்களுடன் கட்சி அலுவலத்தில் இருந்து ஈமெயில் வந்தது,அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன் ஆனால் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் அனுமதிக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்த நீதிமன்றம்
ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்களை காட்டிலும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் ஆனால் எந்த முடிவு எடுக்க வேண்டும், எடுக்கக்கூடாது என்பது குறித்து முன்கூட்டியே உத்தரவாதம் தர முடியாது என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி மாறி மாறி இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அனைத்து தரப்பினரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என கூறி ஒ.பி.எஸ், இ.பி.எஸ்,பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கு ஜூலை 11ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இபிஎஸ் அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தரப்பு ஆலோசனையயில் ஈடுபட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று இரவே ஒ.பி.எஸ். தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய இரு நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.இ.பி.எஸ். தரப்பில், வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாரயணன், மற்றும் ஓ.பி.எஸ். தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலெட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.
ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு தடை
வழக்கு விசாரணையின்போது இருதரப்பு வழக்கறிஞர்களும் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். விடிய விடிய நடைபெற்ற விசாரணையின் முடிவில், அதிகாலை 4.30 மணியளவில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வாசித்தனர். அதில், "அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற எந்த தடையும் இல்லையென தெரிவித்தனர். ஆனால், இந்தக் கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்றும் வேறு எந்த புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என கூறினார்கள். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். என்றும் ஆனால் அவை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிகாலையில் வந்த இந்த உத்தரவு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனையடுத்து இன்று ஆகலை நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் செல்லவுள்ளார். எனவே இந்த பொதுக்குழு கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
OPS vs EPS : ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு தடை..! உற்சாகத்தில் பொதுக்குழுவுக்கு செல்கிறார் ஓபிஎஸ்