ஜனாதிபதி தேர்தலில் தந்தை யஷ்வந்த் சின்ஹா போட்டி.. பாஜக எம்.பி.யாக இருக்கும் மகன் எடுத்த துணிச்சல் முடிவு!

By Asianet TamilFirst Published Jun 23, 2022, 7:37 AM IST
Highlights

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் என்னுடைய தந்தை யஷ்வந்த் சின்ஹா குறித்து அவருடைய மகனும் பாஜக எம்.பி.யுமான ஜெயந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். 
 

புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராகப் போட்டியிடுகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். இதில்,  தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் போட்டியால் பாஜகவில் உள்ள அவருடைய மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. ஜெயந்த் சின்ஹா தற்போது பாஜக எம்.பி.யாக இருக்கிறார். எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னுடைய வாக்கை தந்தைக்கு செலுத்துவாரா அல்லது பாஜக அறிவித்த திரெளபதி முர்முவுக்கு செலுத்துவாரா என்ற பட்டிமன்றமும் பீகார் பாஜகவில் எழுந்தது.

இந்நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டை ஜெயந்த சின்ஹா தெளிவுப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்முஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். முர்முவின்  வாழ்க்கை எப்போதும் பழங்குடியின சமூகம மற்றும் ஏழை நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரைத் தேர்ந்தெடுத்த முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய தந்தை யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். உங்களை அனைவரையும் இதனை குடும்ப விவகாரமாக ஆக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பாஜகாகாரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். என்னுடைய அரசியலமைப்பு கடமையை நான் நிறைவேற்றுவேன்” என்று ஜெயந்த் சின்ஹா பதிவிட்டுள்ளார்.  இதன்மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னுடைய தந்தைப் போட்டியிட்டாலும் அவருக்கு என்னுடைய வாக்கை செலுத்த மாட்டேன் என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.  ஜெயந்த் சின்ஹாவின் இந்தப் பதிவால் பாஜகவினர் அவரை பாராட்டியும் போற்றியும் சமூக வலைத்தள பக்கங்களில் எழுதி வருகிறார்கள்.

click me!