அதிமுகவில் ஒற்றைத் தலைமை பற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதன் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்திருக்கிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 10 நாட்களாக சூறாவளியாக சுழன்றடித்த நிலையில், அதை இறுதி செய்யும் கிளைமாக்ஸ் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இரட்டைத் தலைமையை வலியுறுத்தும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இல்லாமல் போகவே, கடைசி வாய்ப்பாக பொதுக்குழுவை நடத்தவிடாமல் முஸ்தீபுகளை மேற்கொண்டார். பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று காவல் நிலையத்தில் மனு அளித்தார். அவருடைய தரப்பினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். தீர்மானங்களை நிறைவேற்றங்களையும் திருத்தங்களை மேற்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் இரவோடு இரவாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி அனுமதி அளிக்கவே, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நள்ளிரவு வழக்கு விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடந்த மேல்முறையீடு வழக்கில் 3 தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. பின்னர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், ‘அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், “அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இரவில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஓபிஎஸ்ஸுக்கு தற்காலிகமாக நிம்மதி கிடைத்திருக்கிறது.
ஒற்றைத் தலைமை பற்றி கடந்த 10 நாட்களாகவே அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வரை பலரும் கருத்து தெரிவித்துவிட்டார்கள். ஒற்றைத் தலைமை என்பதில் உறுதியாகவும், அந்த ஒற்றைத் தலைமை இபிஎஸ்தான் என்பதையும் தெளிவுப்படுத்திவிட்டனர். இதில் ஹைலைட்டான விஷயமே பொதுக்குழுவில் இதுதொடர்பாக திருத்த தீர்மானம்தான் நிறைவேற்றுவதுதான். அது நிறைவேற்றப்பட்டால், அது உடனே அமலுக்கு வந்திருக்கும். சசிகலாவை போல இபிஎஸ் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது அந்த விஷயத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், இரட்டைத் தலைமையே வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நீடிக்கும். பின்னர்தான் இபிஎஸ்ஸால் நினைத்தப்படி ஒற்றைத் தலைமை ஆக முடியும். தற்போது ஒற்றைத் தலைமை பற்றி புதிதாகப் பேசுவதற்கு பொதுக்குழுவில் ஒன்றும் இல்லை. அதையெல்லாம் கடந்த 10 நாட்களாக அதிமுகவினர் பேசித் தீர்த்துவிட்டார்கள். எனவே, இந்தத் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பு சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறது.