
தமிழக அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றும் முடிந்தால் டிடிவி தினகரனை கைது செய்து பார்க்கட்டும் என்றும் அவரது ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் ஒன்றாக இணைந்ததால் எடப்பாடி மீது உள்ள தங்களின் ஆதரவை வாபஸ் வாங்குவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
மேலும், எடப்பாடி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைதொடர்ந்து எம்.எல்.ஏ ஜக்கையன் திடீரென எடப்பாடி அணிக்கு தாவியதையடுத்து மீதமுள்ள 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக டிடிவி ஆதரவாளர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் மூன்று வாரங்கள் தங்கிவிட்டு இரவோடு இரவாக கர்நாடகா மாநிலம் குடகிற்கு சென்றனர்.
அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர். இதையடுத்து தினகரனின் அனுமதியின் பேரில் விஜயதசமி, ஆயுத பூஜை என தொடர் 4 நாட்கள் விடுமுறைக்காக 28ம் தேதியே சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
விடுமுறை முடிந்ததையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் 10க்கும் மேற்பட்டோர் குடகில் உள்ள சொகுசு விடுதிக்கு திரும்பியுள்ளனர்.
இதனிடையே நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கியதாக கூறி டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றும் முடிந்தால் டிடிவி தினகரனை கைது செய்து பார்க்கட்டும் என்றும் அவரது ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேச துரோக வழக்கு போட்டு எங்களை பயமுறுத்த நினைக்கிறார்கள் என்றும் ஆனால் அது எடுபடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.