அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அ.தி.முக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும், என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.மேலும் 15 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதேப்போன்ற சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பான இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும்- ஓபிஎஸ்
அதில்,"கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. அதனால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் கடந்த வாரம் முறையிடப்பட்டது. அந்த முறையீட்டை ஏற்று வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது அதன்படி இன்று அந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது
அப்போது ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வரக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அ.தி.மு.க கட்சியின் அடிப்படை விதிகள் மொத்தமும் மீறப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் சிவில் சூட் வழக்குகள் முறையாக பரிசீலனை செய்யப்படவில்லை என கூறினார்.
ஓபிஎஸ்- இபிஎஸ் இணைய வாய்ப்பு..?
அப்போது நீதிபதிகள் மீண்டும் இரு தரப்பும் இணை வாய்ப்பு உள்ளதா ? என வினவினார். . . அதற்கு (ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தரப்புக்காக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் குழுவில் இருந்த சிலர் இணைய வாய்ப்புள்ளது எனவும் இணைய வாய்ப்பு இல்லை எனவும் சிலர் கூறினர்) இதனைதொடர்ந்து நீதிபதிகள், இரு தரப்பும் இணையும் விவகாரம் தொடர்பானவற்றை விட்டு விடுவோம் என கூறிவிட்டு, அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் என்ன விதி மீறல் நடந்துள்ளது ? எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன ? என கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பி.எஸ் தரப்பில் பொதுக்குழுவே சட்டவிரோதம், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. முக்கிய அத்தனை முடிவுகளும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது, தன்னை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர் எனவே அந்த பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும், முடிவுகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் ஜூன் 23 மற்றும் ஜூலை 11 பொதுக்குழுவை எதிர்த்தும், சிவில் சூட் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்தனர். அப்போது ஈ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது, எனவே இந்த விவகாரதரதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை என கூறினார்.
உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்
இதனைதொடர்ந்து நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நாங்கள் அனைத்து விவகாரத்தையும் முந்தைய நிலைக்கு திரும்பவும் கொண்டு வர செய்ய வேண்டும் (restore) என உத்தரவிட முடியாது. ஆனால் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற status quo உத்தரவை பிறப்பிக்கலாம் என தெரிவித்ததோடு, வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாமே என தெரிவித்தனர். அப்போது ஓ.பி.எஸ் தரப்பில் அவ்வாறு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற status quo உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால் ஜூலை 11க்கு முன்பு உள்ள நிலை தொடர வேண்டும் என உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் உயர்நீதமன்றத்துக்கே விசாரணைக்காக திரும்ப அனுப்புகிறோம். இந்த விவகாரத்தை உயர்நீதிமனறம் 3 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரை status quo என்ற தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ் மனு மீதான விசாரணை வேறு தேதிக்கு மாற்றம்.. சைடுகேப்பில் அதிரடி முடிவு எடுத்த இபிஎஸ்.!