ஒரே பேட்டியில் வைத்த கோரிக்கை.. உடனே நிறைவேற்றிய தமிழக அரசு.. அடிச்சுத் தூக்கும் அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Nov 1, 2021, 9:11 AM IST
Highlights

ஏற்கெனவே அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக பாஜகவின் கோரிக்கைகளை முதல்வர் செவிமடுக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு விஷயத்திலும் அதுபோலவே நடந்திருப்பதாகவே தெரிகிறது.

ராமேஸ்வரத்தில் தீர்த்தக் கிணறுகளைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கோரிக்கை விடுத்த நிலையில், அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது!

தமிழகத்தில் வழிபாட்டுதலங்களை எல்லா நாட்களும் திறக்கும் விஷயத்தில் தமிழக பாஜக, போராட்டத்தை முன்னெடுத்தது. இதன் தொடர்ச்சியாக ஆயுதபூஜை முதல், எல்லா நாட்களிலும் வழிபாட்டுத்தலங்களைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இது பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் கிடைத்த வெற்றி என்று பாஜகவினர் அகமகிழ்ந்தனர். இதுபோலவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய ஒரு விஷயத்துக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த பிறகு ராமேஸ்வரத்தில் உள்ள  ராமநாதசாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டது. கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன. கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் எல்லா நாட்களும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் தீர்த்தக் கிணறுகள் திறப்படவில்லை. 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுப்பது பற்றி கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, “தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுடன் சேர்ந்திருக்கும் பார்களைத் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 21 தீர்த்தக் கிணறுகளை இதுவரை இந்த அரசு திறக்காமல் இருக்கிறது. தீர்த்தக் கிணறுகளை நம்பி ராமேஸ்வரத்தில் 600 குடும்பங்களுக்கு மேல் இருக்கின்றன. எனவே, தமிழகத்தில் உள்ள கோயில்களில் தீர்த்தக் கிணறுகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்துவரும் பக்தர்களும் பாக்கியம் அடைவர்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைதான் நேற்றுதான் இதைப்பற்றி பேட்டி அளித்திருந்த நிலையில், அன்றைய தினமே அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக பாஜகவின் கோரிக்கைகளை முதல்வர் செவிமடுக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு விஷயத்திலும் அதுபோலவே நடந்திருப்பதாகவே தெரிகிறது.

click me!