தமிழ்நாடு தினம் சர்ச்சை.. நவம்பர் 1 வீரவணக்கம்.. ஜூலை 18 கொண்டாட்டம்.. இது வைகோ ஐடியா..!

By Asianet TamilFirst Published Nov 1, 2021, 8:33 AM IST
Highlights

அண்ணா தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார். இந்த எல்லைப் போராட்டங்களில் தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றுச் சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு.

ஜூலை 18-ம் நாளை, ‘தமிழ்நாடு தினம்’ என்று கொண்டாடுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு பொருத்தமானது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட அண்ணா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த ஜூலை 18-ஆம் தேதி, தமிழ் நாடு தினம் கொண்டாடப்பட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அதிமுக, பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள விசிக, இதுபற்றி ஆலோசித்து முடிவெடுப்பது சாலச்சிறந்தது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பு, சென்னை மாகாணம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்றையும் இணைத்து ‘தட்சிணப் பிரதேசம்’ அமைக்கும் திட்டத்தை நேரு அரசு முன்வைத்தபோது, தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போதைய முதல்வர் காமராஜர், பெரியாரின் கருத்தை ஆதரித்து பிரதமர் நேருவிடம் ‘தட்சிணப் பிரதேசம்’ அமையக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தென் தமிழகத்தின் தமிழர்கள் வாழும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீசுவரம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள் கேரள மாநிலத்துடன் சேர்ந்துவிடாமல் தடுப்பதற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சியுடன் நடத்தப்பட்டன. அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மார்ஷல் நேசமணி, எஸ்.சாம் நத்தானியல், பி.எஸ்.மணி, காந்திராமன், ஆர்.கே.ராம் உள்ளிட்ட தலைவர்கள் போராடி வெற்றி கண்டனர். வடக்கே திருத்தணி தமிழகத்தோடு இணைவதற்கும், தலைநகர் சென்னையை காப்பதற்கும் வடக்கு எல்லைப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தவர் ம.பொ.சி.

அண்ணா தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார். இந்த எல்லைப் போராட்டங்களில் தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றுச் சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு. எனவே நவம்பர் 1 (இன்று), மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளையும் கொண்டாட வேண்டும்; அந்த நாளில், எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். சென்னை மாநிலம் என்ற பெயரை, ‘தமிழ்நாடு’ என மாற்றிட, 1967 ஜூலை 18-ம் நாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த ஜூலை 18-ம் நாளை, ‘தமிழ்நாடு தினம்’ என்று கொண்டாடுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது; பொருத்தமானது.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
 

tags
click me!