தமிழ்நாடு தினம் தேதி மாற்றம்.. ஓரணியில் எதிர்க்கும் அதிமுக கூட்டணி.. மாறுப்பட்ட குரலில் ஒலிக்கும் திருமாவளவன்!

By Asianet TamilFirst Published Oct 31, 2021, 9:44 PM IST
Highlights

கடந்த 2019-ஆம் ஆண்டில், இனி ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி  தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனையடுத்து கடந்த இரு ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தினம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்புக்கு அதிமுக கூட்டணி கட்சிகள் ஓரணியில் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக மாறுப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனையடுத்து இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அந்தத் தேதியை பல மாநிலங்கள் மாநில  தினமாகக் கொண்டாடி வருகின்றன. இதேபோல மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற நவம்பர் 1-ஆம் தேதியை கேரளா, கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மாநில தினமாக கொண்டாடுகின்றன.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டில், இனி ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி  தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனையடுத்து கடந்த இரு ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு தமிழக எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், தமிழ்நாடு தினம் தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சித் தலைவர்கள், எல்லைமீட்பு  போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  எமது வேண்டுகோளாக முன்வைக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினம் தொடர்பான விஷயத்தில், அதிமுக கூட்டணி கட்சிகள் ஓரணியில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் மாறுப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

click me!