ஒவ்வொரு மாசமும் மின் கட்டணம்… அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ஸ்மார்ட் மெசேஜ்

By manimegalai aFirst Published Nov 1, 2021, 8:57 AM IST
Highlights

மாதம்தோறும் மின் கட்டணம் கட்டும் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

கோவை: மாதம்தோறும் மின் கட்டணம் கட்டும் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

கோவையில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி  மக்களிடம் இந்து மனுக்களை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: முதலமைச்சரின் ஆணைப்படி கோவையில் 150 இடங்களில் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உள்ளோம். முதல் நாளில் மட்டும் 3883 மனுக்கள் வந்துள்ளன.

பெரும்பாலான கோரிக்கை மனுக்களில் இடம்பெற்றுள்ள விஷயம் முதியோர் உதவி தொகை வரவில்லை என்பதுதான். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உதவி தொகை வழங்கப்படும்.

தங்க நகை வியாபாரிகள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்படும். மின்துறையில் கிட்டத்தட்ட 56000 காலி பணியிடங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 50 சதவீதம் மின் கணக்கீட்டாளர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

மாதம் தோறும் மின்கட்டணம் என்ற நடைமுறை கொண்டு வரப்படும். இந்த வாக்குறுதி மக்களிடம் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. மொத்தம் கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டு உள்ளது.

ஆகையால் மாதாந்திர மின்கட்டணம் என்ற நடைமுறையும் வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்றப்படும். ஓட்டு போட்டவர்கள் சந்தோஷமாகவும், அதை செய்யாதவர்கள் வருத்தப்படும் அளவுக்கு இந்த ஆட்சி நிர்வாகம் இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறி இருக்கிறார்.

234 தொகுதிகளையும் தமது தொகுதியாக கருதி திட்டங்களை கொண்டு வருகிறார். கோவை மாவட்டத்திலும் பல்வேறு முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்படும். ஏற்கனவே இந்த மாவட்டத்தில் பல பணிகள் இன்னமும் தொடங்கி முடிக்கப்படாமல் உள்ளன.

அந்த பணிகள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் முடிக்கப்படும். இது தொடர்பான கலெக்டர் தலைமையி இதுபற்றி ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சிக்கு என்ன தேவையோ அது செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் தற்போது வரை மின்கட்டணம் என்பது 2 மாதங்களுக்கு ஒரு முறை என்று இருக்கிறது. அதிலும் கடந்த 6 மாதங்களாக மின் கட்டணம் என்பது தொடர்ந்து அதிகமாகி கொண்டே வருகிறது.

அதாவது திடீரென ஒரு முறை நுகர்வோருக்கு 5000 என்று மின் கட்டணம் வருகிறது. ஆனால் அதற்கு முன் கடைசியாக அவர் கட்டிய மின்கட்டணம்  500 ரூபாயாக இருக்கும். அடுத்த முறை கட்டணம் கட்டும் முன்பிருந்த தொகையை விட குறைவாக வசூலிக்கப்படும்.

இதற்கு மின்கட்டண முறையில் வகுப்பப்பட்டுள்ள முறையே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100 யூனிட்டுக்கு கட்டணம் இல்லை என்றும் அதன் பின்னர் வகைப்படுத்தப்பட்டு உள்ள பிரிவுகளின் படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர்

பொதுவாக இத்தகைய நடைமுறையால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இப்போது ஒரு பயனாளி 3700 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு வீட்டை மாற்றிவிடுகிறார். பின்னர் அந்த வீட்டுக்கு வரும் அடுத்த நுகர்வோருக்கு 50 ரூபாயோ அல்லது 100 ரூபாயோ மின் கட்டணம் என்று செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பு வருகிறது.

இதுபோன்ற பல குழப்பங்கள் இருப்பதால் விரைவில் மாதாந்திர மின் கட்டணம் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து வலுத்து வருகிறது.

click me!