நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்கப்படும் எனவும், அதுவும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக தலைமை தெரிவித்துள்ளதால் வைகோ அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெருங்கும் தேர்தல்- தொகுதி உடன்பாடு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாஜக தங்களது கூட்டணி கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதே போல காங்கிரஸ் கட்சியும் டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. அடுத்ததாக தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்கள் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு
அதன் படி முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமநாதபுரம் தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்தநிலையில் திமுக- மதிமுக இடையேயான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லையென கூறப்படுகிறது. மதிமுக சார்பாக இந்த முறை 2 மக்களவை ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் இந்த முறை போட்டியில்லைன்றும், தங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மதிமுகவுடன் தொடரும் இழுபறி
ஆனால் இந்த கோரிக்கையை திமுக தொகுதி பங்கீட்டு குழு நிராகரித்துள்ளது. மதிமுகவிற்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்படும் எனவும், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பாக வைகோ, துரை வைகோ ஆகியோர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்