மனசாட்சி இல்லாமல் பேசுறீங்க! பிரதமர் மோடியின் பாசாங்கு பேச்சுக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்! கே.எஸ்.அழகிரி

By vinoth kumar  |  First Published Jan 4, 2024, 12:12 PM IST

இந்தியாவை கடன்கார நாடாக மாற்றிய பிரதமர் மோடி, பொருளாதார பேரழிவுக்குத் தான் வித்திடுகிறாரே தவிர, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 


பிரதமர் மோடி தமது சாதுரியமான மேடைப் பேச்சின் மூலம் மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களையும், துயரங்களையும் திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார் என கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருச்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள தமிழக மக்களுக்குத் துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும், 17, 18  தேதிகளில் தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்களை நேரிலும், நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி காங்கிரஸ்: ஒய்.எஸ்.ஷர்மிளா புகழாரம்!

ஆனால், தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிதி ஒதுக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் பதில் கூறியதை எவரும் மறந்திட இயலாது. வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்து இதுவரை தமிழகத்திற்கு எந்த நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமரின் பேச்சை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழக வெள்ள பாதிப்புகளுக்காக  நிரந்தர நிவாரணமாக  ரூபாய் 12,659 கோடி நிதியுதவியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 

ஆனால், ஏற்கனவே ஒன்றிய அரசின் நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில் பல மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஜூன் 2023 இல் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 450 கோடியை இன்றைய கோரிக்கையோடு இணைத்துப் பேசுவதை விட ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. கடுமையான பேரிடர் ஏற்பட்ட காரணத்தினால் தான் விடுத்த கோரிக்கைகளை அலட்சியப் போக்கோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதை தான்  முதலமைச்சர் பல நிலைகளில் கண்டனக் குரலாக எழுப்பி வருகிறார். இக்கோரிக்கை குறித்து மேடையில் பிரதமர் முன்னிலையில் ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியதை கூட்டத்தில் அமர்ந்திருந்த பா.ஜ.க.வினர் சகிப்புத்தன்மை இல்லாமல் கோஷங்களை எழுப்பி அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதை வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன். இதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் ஆணவப் போக்கு வெளிப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க;-  சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா? சீறும் சீமான்.!

2015 ஆம் ஆண்டு முதல் வெள்ளம், வறட்சி, வார்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், கனமழை என கடுமையான பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழகம் எதிர்கொண்ட போது இதுவரை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தமிழக அரசு கோரிய நிவாரண தொகை மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 655 கோடி. இதல் ஒன்றிய பா.ஜ.க. அரசு 2015 முதல் 2022 வரை வழங்கியது ரூபாய் 5884 கோடி. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் வெறும் 4.61 சதவிகிதம் மட்டுமே. இந்நிலையில் தமிழகத்திற்கு முன் எப்போதையும் விட அதிகளவில் நிதி ஒதுக்குவதாக பிரதமர் மோடி கூறுவதற்கு என்ன ஆதாரம் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்த கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அதை எதிர்த்து தமிழக முதலமைச்சர் குரல் கொடுப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. 

அதேபோல, பிரதமர் மோடி உரையாற்றும் போது உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசாமல், தமிழ் மொழியை மனதார புகழாமல் என்னால் இருக்க முடிவதில்லை என்று மனசாட்சியே இல்லாமல் உண்மைக்குப் புறம்பாகப் பேசியிருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்ட தரவுகளின்படி அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 22 மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு எத்தகைய கடுமையான பாரபட்சத்தைப் பின்பற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். கடந்த 2017 முதல் 2022 வரை தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகத்திற்கு ரூபாய் 1074 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது ஒன்றிய அரசு. அதற்கு மாறாக மைசூரில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் இந்திய மொழிகளுக்கான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 53.61 கோடி மட்டுமே. 

இது தமிழ், கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருத மொழியைப் பேசுபவர்கள் எத்தனை பேர் ? தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைப் பேசுபவர்கள் எத்தனை பேர் என்பதை மோடி அறியாதவரா ? சமஸ்கிருத திணிப்பை செய்து வருகிற பிரதமர் மோடி அதை மூடி மறைப்பதற்கு தமிழ் மொழி மீது பாசாங்கு வார்த்தைகள் கூறுவதைக் கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்திய பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்திக் காட்டுவேன் என்று பெருமைப்படப் பேசியிருக்கிறார். இந்தியா வளர வேண்டுமென்று விரும்புவதில் தவறில்லை. ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 2014 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62 ஆக இருந்தது. தற்போது 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 82.71 ஆக சரிந்துள்ளது. இதன்படி 40 சதவிகிதம் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. 

இதையும் படிங்க;-   தமிழகத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே இவ்வளவு ஆட்டம்னா! அதிகாரத்துக்கு வந்துட்டா அவ்வளவுதான்! லெனின்

அதுமட்டுமல்லாமல் 2023 நிலவரப்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் 165 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு மதிப்பில் 60 சதவிகிதம். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி. கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 110 லட்சம் கோடி கடனை அதிகமாக பெற்று இந்தியாவை கடன்கார நாடாக மாற்றிய பிரதமர் மோடி, பொருளாதார பேரழிவுக்குத் தான் வித்திடுகிறாரே தவிர, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாறாக, சமீபத்தில் உலக வங்கி அறிவித்தபடி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் இந்தியாவின் கடன் காலப் போக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிஞ்சக் கூடியதாக மாறி, இந்தியாவில் பொருளாதார சீரழிவு ஏற்படும்  என்று எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத பிரதமர் மோடி தமது சாதுரியமான மேடைப் பேச்சின் மூலம் மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களையும், துயரங்களையும் திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

click me!