அடுத்த குறி தெலங்கானா! டோட்டல் 119, மினிமம் 50 அப்போ டார்கெட்? ஆக்ஷனில் குடித்த அமித்ஷா...

First Published May 21, 2018, 3:27 PM IST
Highlights
The next mark is telangana by amit shah


அடுத்த ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் அங்கு நிலவும் அரசியல் சூழல் குறித்து மதிப்பிட வரும் பாஜக தலைவர் அமித் ஷா, கர்நாடகாவை அடுத்து, தென்னிந்தியாவில் தெலங்கானாவை பாஜக குறிவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் லக்ஷ்மண்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலோடு சேர்த்து, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. தற்போது, தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. வரவுள்ள தேர்தலைக் குறிவைத்து, தெலங்கானாவின் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை வலுப்படுத்தும் உள்கட்டமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது பாஜக.

கடந்த வாரம் டெல்லியில் பாஜகவின் அனைத்து அணிகளையும் சேர்ந்த நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில பாஜக தலைவர் லக்ஷ்மண் கலந்துகொண்டார். இதுபற்றி பிடிஐக்கு அவர் அளித்த பேட்டியில் “டெல்லியில் நடந்த கூட்டத்தில், தெலங்கானா மீது பாஜக தலைமை கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்தார் அமித் ஷா. பல மாநிலங்களில் தேர்தல் முடிவுற்ற நிலையில், அடுத்துத் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பாஜகவை வெற்றி பெறச்செய்யும் பணிகள் தொடங்கவிருக்கின்றன” என்று குறிப்பிட்டார் லக்ஷ்மண்.

அடுத்த மாதம் தெலங்கானா மாநிலத்துக்கு அமித் ஷா வரவுள்ளதாகவும், அப்போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து அவர் பேசவிருப்பதாகவும் தெரிவித்தார்.

வாக்குச்சாவடி அளவில் பாஜகவை வலுப்படுத்தும் பணியினை, அக்கட்சியைச் சேர்ந்த அடிமட்ட நிர்வாகிகள் வடமாநிலங்களில் மேற்கொண்டனர். குஜராத், கர்நாடகா மாநிலங்களில் அதிக இடங்களை பாஜக பெற, இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. ‘பன்னா பிரமுக்ஸ்’ என்றழைக்கப்படும் இவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டுவர்.

இந்த வகையில், தெலங்கானாவில் மட்டும் சுமார் 50 தொகுதிகளில் தகவல் திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் லக்ஷ்மண். தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மீதமுள்ள தொகுதிகளில் வாக்காளர் குறித்த தகவல்கள், இன்னும் ஓரிரு மாதங்களில் திரட்டப்படும் என்று அவர் கூறினார்.

தெலங்கானாவிலுள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக பாஜக தேசியச் செயலர் ராம் மாதவ், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பீகாரைச் சேர்ந்த மக்கள் பாண்டே ஆகியோர் விரைவில் நியமிக்கப்படுவர் என்றும் லக்ஷ்மண் தெரிவித்தார்.
ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் சமையல் எரிவாயுத்திட்டம் தொடர்பாக தெலங்கானா மாநிலத்துக்கு பாஜக அரசு ஒதுக்கீடு செய்த நிதி குறித்த விவரங்கள், பாஜகவின் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என்றார்.

அதேபோல, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரசின் தோல்விகளையும் அம்பலப்படுத்துவோம் என்று குறிப்பிட்டார் லக்ஷ்மண். “இளைய தலைமுறைக்கு வேலைவாய்ப்பு, ஏழைகளுக்கு இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகள் மற்றும் தலித்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் வழங்குவது போன்றவற்றை ராவ் அரசு நிறைவேற்றாதது குறித்துப் பேசுவோம்” என்று அவர் தெரிவித்தார்.

மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாகத் தீவிரமாக சந்திரசேகர ராவ் செயலாற்றி வரும் நிலையில், அமித் ஷாவின் குறி தெலங்கானா மீதிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரங்களையும் பாஜக முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!