
எடப்பாடி மீது சசிகலா ஆதரவாளர், ஊழல் புகாருக்கு இலக்கானவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதால், அவர் முதல்வராக தொடர்வதை பிரதமர் மோடி விரும்பவில்லை.
அதே சமயம், பன்னீரை மீண்டும் முதல்வர் ஆக்கினால், அதில் பாஜகவின் பின்னணி இருப்பது அப்பட்டமாக தெரிந்து தேவை இல்லாமல் கேட்ட பெயர் ஏற்படும்.
அதனால், பன்னீர், எடப்பாடி அல்லாது புதிய முதல்வர் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதற்கேற்பவே, அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை இருக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லி நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பின்னர், இரு அணிகளின் இணைப்பை இறுதி செய்யவும், முதலில் கட்சி, ஆட்சி ஆகிய இரு பதவிகளை மட்டும் பேசி முடித்துக் கொள்ளவும் மேலிடத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற விஷயங்களை பிறகு பேசிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்.
முதல் கட்டமாக நிதியமைச்சர் பதவியும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியும் பன்னீருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்ததாக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியின் அணியில் உள்ள ஒருவருக்கு கொடுக்கச்சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து தீவிர ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
அதனால், இரு அணிகள் இணைப்புக்கு பிறகு, பன்னீர், எடப்பாடி அல்லாத ஒருவரே முதல்வராக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதனிடையே, பன்னீர் அணியை சேர்ந்த அனைவரும், ஆளுக்கொரு பொறுப்பு கேட்டு அவரை நச்சரிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மாபா பாண்டியராஜன், விஜயபாஸ்கரின் சுகாதார துறையை கேட்டுள்ளார். கே.பி.முனுசாமியோ, துணை பொது செயலாளர் பதவியை கேட்டுள்ளார்.
பன்னீருக்கு முதலில் ஆதரவு தெரிவித்த சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், செல்லூர் ராஜுவின், கூட்டுறவு துறை அமைச்சர் பதவியின் மீது குறி வைத்துள்ளார்.
முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன், கட்சியில் முக்கியப் பதவியைக் கேட்டதோடு நியமனப் பதவி ஏதாவது ஒன்றையும் கேட்டுள்ளார்.
நத்தம் விஸ்வநாதனோ, கட்சியில் பொருளாளர் பதவியைக் குறிவைத்து காத்திருக்கிறார்.
கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு என்ற ஒன்றை உருவாக்கி அதில் தன்னை தலைவராக்க வேண்டும் என்று பொன்னையன் நச்சரித்து வருகிறார்.
பி.எச்.பாண்டியனும், மனோஜ் பாண்டியனும் தாங்கள் சொல்லும் நபருக்கு சட்டத்துறையைக் கொடுக்க வேண்டுமென்று நெருக்கடி கொடுத்துவருகிறார்கள்.
இது தவிர, பன்னீர் அணியின் பல முக்கிய நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொறுப்புகளைக் கைப்பற்ற துடித்து வருகின்றனர்.
மேலும், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோரின் பதவிகள் எந்நேரமும் பறிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.
அத்துடன், ஒரே மாவட்டத்திரு, எதற்காக இரண்டு அமைச்சர்கள் பதவி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நச்சரிப்புகள், நியமனங்கள், நீக்கங்கள் ஆகியவற்றை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிறைந்த அமாவாசை தினமான நாளைய மறுநாள், அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியிடப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், புதிய முதல்வர் நியமனம் குறித்த முடிவில், கடைசி நேரத்தில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.