கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் அழகிரியின் ஆதரவாளர்கள் வேகமாக தலையெடுக்க துவங்கியுள்ளனர். கடந்த சில வருடங்களாக அமுங்கிக் கிடந்த அழகிரியின் ஆதரவு கோஷ்டிகள் மிகப்பெரிய பிளக்ஸுகள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் என்று அழகிரிக்காக ஓவர் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.ஸ்டாலினுக்கு எதிராக தெற்கு தமிழக தி.மு.க.வில் ஒரு நெருக்கடியை உருவாக்க அழகிரி திட்டமிட்டிருக்கும் நிலையில் மதுரை மண்ணில் ஸ்டாலினுக்காக உறுமிவிட்டு வந்திருக்கிறார் ஆ.ராசா.vமதுரை ஆனையூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா “இந்தியாவில் செல்போன் பிரயோகம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்ததுக்கு காரணம் கருணாநிதிதான். மத்திய அரசில் அங்கம் வகித்தவர், எனக்கு தொலை தொடர்புத் துறையை பெற்றுத் தந்து ஆளாக்கினார். என்னை அத்துறையில் சாதிக்க தூண்டினார்.‘உன் காலத்தில் எழை இந்தியனும் மொபைல் வசதியை பெறணும்யா’ன்னு உத்வேகப்படுத்தினார். அவர் தந்த உந்துதலால்தான் நான் அந்த துறையில் சாதித்தேன். நான் படிக்கும் காலத்தில் ஒரு போட்டோ எடுக்க ஒரு மணி நேரமாகும். ஆனால் இப்போதோ ஒரு போட்டோ எடுத்து அடுத்த நொடியே உலகின் எந்த மூலையிலிருக்கும் நபருக்கும் அனுப்பிவிடலாம்.” என்று கருணாநிதியின் பெருமை பேசியவர், அடுத்து பரபர அரசியல் பாயிண்டை பிடித்தார் இப்படி...”ஜெயில் வாழ்க்கை எனக்கோ தி.மு.க. தொண்டர்களுக்கோ புதிதில்லை. 1963-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்டம் 17வது பிரிவை எதிர்த்ததற்காக அப்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த அறிஞர் அண்ணாவை ஜெயிலில் அடைக்கவில்லை.ஆனால் 1986-ல் அதே அரசியல் சட்டத்தை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரித்த சட்டமன்ற எதிர்கட்சித் தணைத்தலைவராக இருந்த கருணாநிதியை ஜெயிலில் கைதி உடை அணிவித்து அடைத்தார் அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். எனவே அவருக்கு கூட மொழிப்போர் நினைவு நாள் கொண்டாட தகுதியில்லை. வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு ஆங்கிலேயர் கூட கைதி உடை அணிவிக்கவில்லை.ஆனால் தலைவர் கருணாநிதிக்கு கைதி உடையை அணிவித்தார் எம்.ஜி.ஆர். ஆக ஆங்கிலேயருக்கு இருந்த மனிதாபிமானம் கூட எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை.”என்று போட்டுப் பொளந்து கட்டிய ராசா, இறுதியில் “ஸ்பெக்ட்ரம் வழக்கில் நான் ஜெயித்துவிடுவேன் என்று கூறியதை யாரும் நம்பவில்லை. அதிலே எப்படி ஒரு நல்ல தீர்ப்பு வரப்போகிறது என சட்டம் படித்த நான் தெரிவித்தேனோ அதேபோல் தமிழ்நாட்டில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கப் போகிறார்கள்.அந்த தீர்ப்பு வேறு ஒன்றுமில்லை. மு.க.ஸ்டாலினை முதல்வராக்கும் தீர்ப்புதான்.” என்று பேசியதைத்தான் அழகிரி ஆதரவாளர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.