மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்படும் எந்த திட்டத்தையும் முழுமையாக எதிர்ப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பித்தலுக்கான படிவங்கள் வினியோகம் சென்னை ராயப்போட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விண்ணப்ப படிவங்களை வழங்கி தொடங்கிவைத்தனர்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ள போக்குவரத்துறை நலிவடைந்து போகக்கூடாது என்பதற்காக வேறு வழியின்றி பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளோம் எனவும் திமுக ஆட்சி வைத்துவிட்டுச்சென்ற ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகை ரூ.922 கோடியை நாங்கள் தான் வழங்கியிருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.அப்போது, ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவந்தால் வரவேற்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. எந்த வரியும், மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டால் அதை முழுமையாக எதிர்ப்போம் என எடப்பாடி தெரிவித்தார்.