எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற சதிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன எனவும் டிடிவி தினகரன் மீண்டும் சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது எனவும் மின்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்ட சில நாட்களிலேயே பேருந்து கட்டணங்களை உயர்த்தியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. திமுக தரப்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும் பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது. முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு சாதித்து காட்டினார். இந்நிலையில் அவரும் பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார். இதைதொடர்ந்து நேற்று மாலை அவர் வெற்றி பெற்ற ஆர்.கே நகர் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலம் தெரியும். நாங்கள் அதிமுக அம்மா அணி என்று பெயரில் செயல்பட இருக்கிறோம் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற சதிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன எனவும் டிடிவி தினகரன் மீண்டும் சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது எனவும் தெரிவித்தார்.