அதிமுக., பொதுச் செயலராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா சென்ற 2016ம் வருடம் டிசம்பர் மாதம் 5ம் தேதி காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்பே பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் பலமாக மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதன் பின்னர் ஜெயலலிதா காலமானதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் மரபுப் படி பார்த்தால், ஜெயலலிதா, கார்த்திகை மாத சுக்ல பட்ச பஞ்சமி / சஷ்டி திதியில் மறைந்தார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், அவருக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன. அதில் பல மரபு மீறல்கள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்தது முதலே மர்மங்கள் பின் தொடர்ந்தன. அந்த மர்மங்கள், உடனிருந்தே எல்லாம் செய்த சசிகலா குடும்பத்தின் மீது பலத்த சந்தேகப் பார்வையை பதியச் செய்தது. அதன்பின்னரும் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மர்மங்களாகவே இருந்தன. ஒரு இரும்புத் திரை அங்கே போடப்பட்டது. அதை மீறி எவரும் செல்லாத அளவில் சசிகலா செயல்பட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும், காலமான பின்னரும், சசிகலா குடும்பத்தினர் நடந்து கொண்ட விதம், செயல்படுத்திய அதிரடிகள் எல்லாம் பெரும் அதிருப்தியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.இந்நிலையில், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் சசிகலாவும், அவர் பின்னே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் இருந்து செய்தார்கள். ஆனால், அப்போதே அந்த சடங்குகளில் தெரிந்த முறைகேடுகள் குறித்து பலத்த சர்ச்சை ஏற்பட்டது. அதை எல்லாம் புறந்தள்ளி சசிகலா குடும்பத்தினர் அதிரடிகளைத் தொடங்கினர். ஆனால், ஜெ. ஆன்மா என்பது எப்படி பழிவாங்கப் போகிறது பாருங்கள் என்று ஜெ. விசுவாசிகள் பேசத் தொடங்கினர். அம்மாவின் ஆணையால் ஆட்சி நடத்தியவர்கள், அம்மாவின் ஆன்மாவால் ஆட்சி நடத்தத் தொடங்கினார்கள். அதனாலேயே முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் சமாதித் தியானம் செய்து, தர்ம யுத்தம் பகுதி 1 ஐத் தொடங்கினார். அதன் பின்னர் ஜெ. ஆன்மா அதிகம் வேலை செய்யத் தொடங்கியதாக விசுவாசிகள் பேசிக் கொண்டனர். சசிகலா சிறை சென்றது, தினகரன் மாட்டிக் கொண்டது, சிறை சென்றது, நடராஜன் உடல் நலம் குன்றிப் போனது, அறுவை சிகிச்சை செய்தது, சசிகலா குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகள், தொடர்ந்து நடந்த ஐடி ரெய்டுகள் என சுற்றிச் சுழன்றடிக்கும் சூறாவளியால்... எல்லாம் ஜெயலலிதாவின் ஆன்மாவே காரணம் என்றும், அது தன்னை வஞ்சித்தவரை பழி தீர்ப்பதாகவும் பேசிக் கொண்டார்கள் அம்மா விசுவாசிகள். அந்தக் கூற்றுக்கு வலு சேர்ப்பது போல், பலமுறை தினகரன் தரப்பு வழக்கறிஞர்களால் இழுத்தடிக்கப்பட்ட இரட்டை இலை சின்ன மீட்பு விவகாரம், இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இன்று அதே கார்த்திகை சுக்ல பட்ச பஞ்சமி திதி. ஆனால், மூன்று தினங்களுக்கு முன்னரே, போயஸ் கார்டன் இல்லத்துக்குள் நுழைய தினகரன் ஆதரவாளர்கள் முயன்றனர். அதற்கான காரணமாக ஜெ.வுக்கு மாத திதி கொடுக்க என்றார் ஒருவர். ஆனால், அவர்கள் அங்கே அனுமதிக்கப்படவில்லை. வருமான வரித்துறை சோதனை நடந்து, அறை பூட்டப்பட்ட நிலையில், அங்கேதான் திதி கொடுக்க வேண்டும் என்று யார் சொன்னார்களோ? அந்த அரசியல் விளையாட்டையும் கடந்து, இன்று ஜெயலலிதாவின் ஆன்மா தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள் அம்மா ஆதரவாளர்கள். ஆக, அம்மாவின் ஆன்மா... இன்றும் வேலை செய்து கொண்டிருக்கிறதுதான் போல...!