ஏஸியாநெட் தமிழ் - இணையதளம் எந்த உள்நோக்கமுமில்லாமல் யதார்த்த கணிப்போடு தினகரனை பற்றி சொன்ன வார்த்தையை இன்று அ.தி.மு.க. உச்சரிக்க துவங்கியிருக்கிறது. ஆர்.கே.நகரில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்க துவங்கியதுமே சூழ்நிலைகளை தெளிவாக ஸ்கேன் செய்து தினகரனுக்கு சாதகமான சூழல் நிலவுவதை சொல்லிக் கொண்டே வந்தோம். அதன் ஒரு நிலையாக ‘இன்னொரு ஜெயலலிதாவாகிறாரா தினகரன்?’ என்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். பரவலாக பேசப்பட்ட கட்டுரை அது. அன்று அந்த கட்டுரையின் தலைப்பை பார்த்து அலட்சியமாக சிரித்த அ.தி.மு.க.வின் தலைமை நிர்வாகிகள் இன்று அதே தலைப்பை தங்களின் அதிர்ச்சியின் வெளிப்பாடாட்டில் உச்சரிக்கிறார்கள். ஆம் கிட்டத்தட்ட இன்னொரு ஜெயலலிதா போலத்தான் உருமாறி, உருவேறிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அக்கட்சியின் நெடு நீண்டநாள் அபிமானிகள். ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கடைசியாய் இருந்தவர் ஜெயலலிதா. அங்கே அமோகமாக வென்ற அவரது இடத்தில்தான் மிக அமோகமாக வென்று வந்தமர்ந்திருக்கிறார் தினகரன். ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோதெல்லாம் அரசு அவரோடு இருந்தது, அமைச்சர்கள் அவரோடு இருந்தது. அதையெல்லாம் தாண்டி ‘அம்மா’ எனும் விஸ்வரூப பட்டம் அவரோடு இருந்தது. ஆனால் இன்று தினகரன் அங்கே போட்டியிட்டபோது அரசு அவரை எதிர்த்தது, அமைச்சர்கள் அவரை வீதிவீதியா கிழித்தனர். அதைத்தாண்ட் அ.தி.மு.க.வின் எதிரியாக அவர் சித்தரிக்கப்பட்டார். ஆனால் இத்தனையையும் தாண்டி டி.டி.வி எகிறி குதித்து ஜெயித்திருக்கிறார் என்றால். இது தனி மனித சாதனையன்றி வேறில்லை. எம்.ஜி.ஆர். மரணித்த பின், ஜெ-ஜா என கட்சி உடைந்த பின் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டு, சொந்தக்கடி வைரிகளை வீழ்த்தியே ஜெயலலிதா பெரும் தலைவரானார். அன்று துவக்கத்தில் அவர் என்ன நிலையை சந்தித்தாரோ அதே நிலையைதான் இன்று டி.டி.வி சந்தித்தார், சாதித்திருக்கிறார். துவக்க கால சவால்களும், சாதனைகளும் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒன்று போலத்தான் உள்ளன! ‘அம்மா மாதிரி ஜெயிச்சுட்டாரேய்யா!’ என்று தினகரனை தொண்டர்கள் அதிசயமாய் கொண்டாடுகிறார்கள். இன்னொரு ஜெயலலிதாவாக தினகரன் மாற துவங்குவதில், அதில் துவக்க வெற்றி கிடைத்திருப்பதும் சாதனைதான். ஆனால் ஜெயலலிதாவாகி காட்டுவதென்பது இமயமலையை இடுப்பில் தூக்கி சுமப்பது போல்!ஜெயலலிதா ஸ்டைலில் கேட்பதென்றால்...’செய்வாரா! டிடிவி, செய்வாரா?’