பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் நடைபெறும் பொதுமக்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளியுங்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு பேருந்துகளில் 100% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு அறிவித்து 20ம் தேதி காலை முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. தினக்கூலிகள், மாத ஊதியதாரர்கள் ஆகியோர் பேருந்து கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் நடைபெறும் பொதுமக்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளியுங்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து போக்குவரத்து துறையை சீர்செய்ய வேண்டும் எனவும் வருமானம் உள்ள வழித்தடங்களில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்து கழகத்தை சீர் செய்ய நினைப்பது முறையல்ல எனவும் விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களுக்கு கட்டண உயர்வு கூடுதல் சுமை எனவும் தெரிவித்துள்ளார்.