ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், திமுக எம்எல்ஏவான அண்ணாநகர் மோகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
திமுக நிர்வாகியின் சொத்தா ஜி ஸ்கொயர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், உரிய வரி கட்டவில்லையென்றும் ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது, பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய, அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்திருக்கிறது. எனவே இந்த ஸ்கொயர் நிறுவனத்தில் திமுக தலைவர் குடும்பத்தில் நெருகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருப்பதாக தெரிவித்தார்.
வருமான வரித்துறை சோதனை
அண்ணாமலையின் குற்றச்சாட்டை தொடர்ந்து இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகம், கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகம், ஐதராபாத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக உள்ள கார்த்தியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?
இவரது தந்தை அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகன் ஆகும், கார்த்தி திமுக தலைவர் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர் என்பதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக எம்எல்ஏ வீட்டில் சோதனை நடைபெறுகிறது தகவலால் அந்த பகுதி திமுக நிர்வாகிகள் வீட்டின் அருகில் கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.